இந்தூர் (ம.பி): சையது முஸ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் வியாழக்கிழமை இந்தூரில் நடைபெற்ற ஆட்டத்தில் பரோடா – சிக்கிம் அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பரோடா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 349 ரன்கள் குவித்து மிரளச் செய்தது. இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அணி என்ற வரலாற்று சாதனையை பரோடா படைத்தது.
இதற்கு முன்னர் கடந்த அக்டோபார் காம்பியா அணிக்கு எதிரான சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணி 344 ரன்கள் குவித்ததே, டி20 கிரிக்கெட்டில் ஓர் அணி குவித்த அதிகபட்ச ரன்களாக இருந்தது. இதை தற்போது முறியடித்து பரோடோ புதிய சாதனை படைத்துள்ளது. பரோடோ அணி சார்பில் 37 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்படுவதும் இதுவே முதன்முறையாகும்.
அந்த அணியில் அதிகபட்சமாக பானு பூனியா 51 பந்துகளில் 11 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 134 ரன்கள் விளாசினார். அபிமன்யுசிங் ராஜ்புத் 53, ஷிவாலிக் சர்மா 55, விஷ்ணு சோலங்கி 50, ஷாஷ்வத் ராவத் 43 ரன்கள் சேர்த்தனர். 350 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சிக்கிம் அணியால் 7 விக்கெட்கள் இழப்புக்கு 263 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் பரோடா அணி 263 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.