மும்பை: ஏக்நாத் ஷிண்டேவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்றும் அவர் மீண்டும் முதல்வராக மாட்டார் என்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவின் புதிய முதல்வராக பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இன்று முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். புதிய அரசில் ஏக்நாத் ஷிண்டே பங்கேற்க வேண்டும் என பட்னாவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். துணை முதல்வர் பொறுப்பை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு விரைவில் தெரிய வரும் என ஷிண்டே பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “ஷிண்டே சகாப்தம் முடிந்துவிட்டது. அவர் முதல்வர் பதியை ஏற்று இரண்டு வருடங்கள்தான் ஆகி உள்ளது. இப்போது அவருடைய பயன்பாடு முடிந்துவிட்டது. எனவே அவர் தூக்கி எறியப்பட்டுள்ளார். ஷிண்டே மீண்டும் இந்த மாநிலத்தின் முதல்வராக முடியாது.
அவர்களால் (பாஜக) ஷிண்டேவின் கட்சியைக் கூட உடைக்க முடியும். பாஜகவின் அரசியல் இப்படித்தான் இருந்து வந்துள்ளது. அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்களின் கட்சியை உடைத்து அதை முடித்துவிடுவார்கள். தேர்தல் முடிவு வெளியாகி 15 நாட்களுக்கு அவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. இது அவர்களின் கட்சி அல்லது மகாயுதி கூட்டணியில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகிறது.” என தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 280 தொகுதிகளில் மகாயுதி கூட்டணி 235 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 57 மற்றும் 41 இடங்களில் வெற்றி பெற்றன. எதிர்தரப்பில் மகா விகாஸ் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களையும், சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பிரிவு 20 இடங்களையும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி 10 இடங்களையும் கைப்பற்றியது.