நாகரிகச் சமூகம் தோன்றிய காலத்திலிருந்து மனிதர்கள் ஏதாவது ஒரு போதைக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகிவிட்டது. பெரும்பாலும் சமூக நெருக்கடிகள் இவற்றுக்குக் காரணமாக இருக்கின்றன. 50 வருடங்களுக்கு முன் தொலைக்காட்சியை ‘இடியட் பாக்ஸ்’ என்று குறிப்பிட்டனர். இன்று வளரிளம் பருவத்தினர், இளைஞர்களின் முக்கியப் பிரச்சினையாகச் சொல்லப்படு வது – அதீத இணையப் பயன்பாடு.
தவிர்க்க முடியாதது எந்தவோர் அறிவியல் கருவியும் தொழில்நுட்பமும் அதனு டைய சாதக – பாதகங்களோடுதான் இருக்கும். அந்த வகையில் திறன்பேசியும் அதனுடன் வரக்கூடிய அதீத இணையப் பயன்பாடும் இன்று முக்கியப் பிரச்சி னையாக உருவெடுத்து வருகிறது. பள்ளி, கல்லூரியில் பயிலும் வயது டைய உங்கள் நண்பர்களில் ஒருவர் மனநல ஆலோசனைகளுக்காக மருத்து வரைச் சந்திப்பதையும் அல்லது சந்திக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தும் தயக் கத்தால் தவிர்த்து வருவதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். அல்லது நீங்களும்கூட அவர்களில் ஒருவராக இருக்கலாம்.
கரோனாவுக்குப் பிறகு நண்பர்களோடு சேர்ந்து வெளியே சென்று விளையாடுவது குறைந்து, திறன்பேசியோடு எந்நேரமும் கழித்துக் கொண்டிருப்பதை உங்களால் உணர முடிகிறதா? திறன்பேசிக்கு நீங்கள் அடிமையாகிவருவதைக் கண்டு அறிவுரை சொல்லும் பெற்றோரை, ஆசிரியரைப் பார்த்துக் கோபம் வருகிறதா? படிப்பிலும் முன்பைவிட ஆர்வம் குறைந்துவிட்டதாக உணர்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். இந்தப் பிரச்சினைகளை எவ்வாறு அணுகுவது என்பதைப் பற்றி முதலில் தெரிந்துகொள்வோம்.
காரணம் என்ன? – இணையப் பயன்பாடு வாழ்க்கையின் முக்கியத் தேவையாகிவிட்டபோது குறிப்பிட்ட சிலர் மட்டும் இதற்கு அடிமையாவ தற்குச் சில உளவியல் காரணிகள் உள்ளன. ஒருவர் தனது வாழ்க்கையில் ஏற்படும் சமூக நெருக்கடிகளை நேரடியாக எதிர்கொள்ள இயலாமல், இணையப்பயன்பாட்டிற்குள் தன்னைப் புதைத்துக்கொள்பவராக இருக்கலாம். அதிக மன அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், தனிமை யுணர்வு ஆகியவற்றிலிருந்து விடுபடவும், உண்மையான அல்லது கற்பனையான மனச்சிக்கல்களில் இருந்து விடுதலை பெறுவதற்காகவும் உளவியல் ரீதியாகத் தப்பிக்கும் உத்தியாக இணையத்தைப் பயன்படுத்துபவராக இருக்கலாம்.
இது ஒருவித ‘Escape mechanism’. தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை யால் ஏற்படும் எதிர்மறை உணர்வுகளைச் சமாளிக்க, அதற்கு மாற்றாக இணை யத்தைச் சிலர் பயன்படுத்துவார்கள். அதாவது, மெய் உலகில் தனக்கு இருக்கக்கூடிய பலவீனங்களை, பிரச்சினைகளை எதிர்கொள்ள வாய்ப்பு இல்லாமல், எதிர்மறையான பாதிப்பிலிருந்து விடுபடு வதற்கான ஒரு வழியாகவும், பிறரின் புறக்கணிப்பைக் கையாள்வதற்காகவும் இணையத்தை நாடுவது. இது ஒருவித ‘Compensatory mechanism’. இந்தக் காரணங்களுக்காக அதீத இணையப் பயன்பாடு எனும் வலையில் நீங்கள் சிக்கியிருக்கலாம்.
என்ன செய்யலாம்? – உங்களுக்கும் அதீத இணையப் பயன்பாட்டுக் கோளாறு இருக்கிறதா என்பதை இந்த அறிகுறிகளை வைத்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதீத இணையப் பயன்பாட்டைக் குறைக்க நீங்கள் முயலும்போது உங்களுக்குப் பதற்றம் உண்டாகிறதா? வெறுமனே சமூக வலைதளத்தை ‘ஸ்க்ரால்’ செய்வதும் (Doom Scrolling), அதிகமாகச் சமூக வலைதள / இணையதளப் பயன்பாடு பற்றி நினைத்துக்கொண்டிருப்பதும் வாடிக்கை யாகிவிட்டதா? கற்றலில், பணியில் கவனச் சிதறல் ஏற்படும் அளவுக்கு இணையப் பயன்பாடு இருப்பதும், உறவுகளில் சிக்கல் ஏற்படுத்தும் அளவுக்குப் பாதிப்பு ஏற்படுவதும், உறக்கம்-சாப்பிடுவது உள்ளிட்ட தினசரி வேலைகளைச் சரிவர செய்ய இயலாமல் போவதும் இதற்கான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதீத இணையப் பயன்பாட் டால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் புரிந்து கொள்ளலாம்.
அதீத இணையப் பயன்பாட்டுக்கு அடிமையாகி இருப்பவர் முதலில் பெற் றோர், ஆசிரியரின் உதவியை நாடலாம். பின்பு மருத்துவரின் ஆலோசனையின்படி புறச் சூழல்கள் எவ்வாறு ஒருவரை அந்த நிலைக்குத் தள்ளுகின்றன என்பதைப் பற்றி விளங்கிக்கொள்ள வேண்டும். வெளிப்புற விளையாட்டுகள், புத்தகம் வாசிப்பு, பாட்டு, நடனம் போன்ற விருப்பமுள்ள திறன்களை வளர்த்துக்கொள்வதிலும், ஆக்கபூர்வமான விஷயங்களை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தலாம். அதீத இணையப் பயன் பாட்டில் இருந்து மீள வழிகள் இல்லாமல் இல்லை; சரியான வழியைப் பின்பற்றினால் இதிலிருந்து கண்டிப்பாக மீண்டு வரலாம்!
(தொடர்ந்து பேசுவோம்)