புதுடெல்லி: ராணுவத்தில் ரூ.21,772 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் 5 நவீனமயமாக்கல் திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியது.
கடற்படை பயன்பாட்டுக்கு 31 வாட்டர் ஜெட் அதிவேக படகுகள் வாங்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சில் தலைமையிலான கொள்முதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த அதிவேக படகுகள் மூலம் கடற்கரை பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடற்கொள்ளை தடுப்பு பணிகளுக்கும் இந்த விரைவுப் படகுகள் ஈடுபடுத்தப்படும். மேலும் கடலோர பகுதிகளில் போர்க்கப்பல்களுக்கு பாதுகாப்பாக செல்ல 120 அதிவேக படகுகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
விமானப்படையில் உள்ள சுகோய் போர் விமானங்களில் ஜாமர் மற்றும் ரேடார் போன்ற எலக்ட்ரானிக் பாதுகாப்பு கருவிகளை பொருத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விமானத்தின் திறன் மற்றும் பாதுகாப்பு அதிகரிக்கும்.
கடலோர காவல் படைக்கு 6 நவீன இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தரைப்படையில் உள்ள டி-72 மற்றும் டி-90 டேங்க்குகள், கவச வாகனங்கள் மற்றும் சுகோய் போர் விமானங்களின் இன்ஜின் ஓவர்ஹாலிங் பணிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இவற்றின் பணிக்காலம் அதிகரிக்கும்.