மும்பை: மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழா நாளை மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் இன்று மும்பை விதான் பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கான மத்திய பார்வையாளர்களாக மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும், குஜராத் முன்னாள் முதல்வரும் பஞ்சாப் மற்றும் சண்டிகர் பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக தேவேந்திர ஃபட்னவிஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மகாராஷ்டிர மாநில முதல்வராக ஃபட்னவிஸ் நாளை பதவியேற்கிறார். இதற்கான பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.