அமராவதி: வேலைக்காக துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஏமாற்றப்பட்ட ஆந்திர இளைஞர்கள் 16 பேரை மீட்க அம்மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், வலசா, வஜ்ரபு கொத்தூரு, சந்தபொம்மாலி, கஞ்சிலி மற்றும் இச்சாபுரம் பகுதிகளை சேர்ந்த 16 இளைஞர்களை ஏஜென்ட் ஒருவர் வேலைக்காக துபாய்க்கு அனுப்பி உள்ளார். ஆனால் அங்கு இவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த 16 பேரும் வேறு வழியின்றி தாயகம் திரும்ப முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அங்குள்ள நபர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் இவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை ஒரு வீடியோ பதிவில் தெரிவித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். ஆந்திர அரசு தலையிட்டு தங்களை மீட்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர அமைச்சர் அச்சம்நாயுடு ஆகியோர் இவர்களை மீட்க நடவடிக்கை எடுப்பதாக நேற்று உறுதி அளித்தனர். மேலும் துபாயில் சிக்கியுள்ள இளைஞர்களிடம் செல்போன் மூலம் பேசினர். இவர்களை விரைவில் மீட்டு தாயகம் கொண்டு வருவோம் என அமைச்சர் அச்சம்நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.