மும்பை: “காலையிலும் மாலையிலும் பதவியேற்று தாதாவுக்கு (அஜித் பவாருக்கு) அனுபவம் உண்டு” என்று பவார் பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் ஏக்நாத் ஷிண்டே அடித்த ஜாலியான கமென்ட், கூட்டணித் தலைவர்களிடம் சிரிப்பை ஏற்படுத்தியது.
மகாராஷ்டிரா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள தேவேந்திர ஃபட்னாவிஸ் உடன் சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் கூட்டாக சென்று புதிய அரசு அமைக்க புதன்கிழமை உரிமை கோரிய பின்பு செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர் ஒருவர், ஆசாத் மைதானத்தில் நீங்களும் (ஷிண்டே) பவாரும் துணை முதல்வர்களாக பதவியேற்பீர்களா என்று வினவினார். அதற்கு பதில் அளித்த காபந்து முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, “நாளை பதவியேற்பு விழா நடக்க இருக்கிறது. மாலை வரை காத்திருங்கள்” என்றார்.
அப்போது இடைமறித்த என்சிபி தலைவர் அஜித் பவார், “அவர் (ஷிண்டே) அதனைத் தெரிந்துகொள்ள மாலை வரை காத்திருப்பார். ஆனால். நான் பதவி ஏற்பேன்.” என்றார். இதனைக் கேட்டதும் தலைவர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. பவாரைத் தொடர்ந்து உடனடியாக பதில் அளித்த ஷிண்டே, “தாதாவுக்கு (பவாருக்கு) காலையிலும் மாலையிலும் பதவியேற்ற அனுபவம் உண்டு” என்று கமென்ட் அடித்தார். இது தலைவர்கள் மத்தியில் சிரிப்பை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து மராத்தியில் பேசிய அஜித் பவார், “முன்பு நானும் தேவேந்திர ஃபட்னாவிஸும் துணை முதல்வர்களாக காலையில் பதவி ஏற்றுக்கொண்டோம். ஆனால் அந்த அரசு நீடிக்கவில்லை” என்று முந்தைய அனுபவத்தை பகிர்ந்து கொண்டவர், “இந்த முறை எங்களின் அரசு ஐந்து ஆண்டுகளை முழுமையாக பூர்த்தி செய்யும்” என்று உறுதி அளித்தார்.
கடந்த 2019-ம் ஆண்டு சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில், ராஜ் பவனில் நடந்த விழாவில் காலையில் அஜித் பவாரும், தேவேந்திர ஃபட்னாவிஸும் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர். பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கான ஆதரவினை என்சிபி எம்எல்ஏக்களிடமிருந்து பெறுவதற்கு அஜித் பவார் தவறியதால் அந்த அரசு 80 மணி நேரத்தில் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைத்து உத்தவ் தாக்கரே தலைமையில் அரசு அமைத்தது. அப்போது அஜித் பவார் மீண்டும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் ஷிண்டே மற்றும் பவார் இந்த நிகழ்வை மீண்டும் நினைவுகூர்ந்து கமென்ட் அடித்துக்கொண்டனர்.
ஆட்சி அமைக்க உரிமை கோரல்: பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரை ஆதரித்து சிவ சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம் தயாரிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, நிர்மலா சீதாராமன், விஜய் ரூபானி, தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது தேவேந்திர ஃபட்னாவிஸ் முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதத்தை அளித்தார். இதனையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.