சென்னை: ’அட்டகத்தி’ படத்தை இயக்கும் வாய்ப்பை தான் பெற்றது குறித்தும், சந்தோஷ் நாராயணனுடன் முதன் முதலில் இணைந்தது குறித்தும் இயக்குநர் பா.ரஞ்சித் பகிர்ந்துள்ளார்.
மிர்ச்சி சிவா நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிச.03) நடைபெற்றது. இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நலன் குமாரசாமி மற்றும் இசையமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் நால்வரும் தங்களுடைய ஆரம்பகால நாட்களை சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து கொண்டனர்.
இதில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசியதாவது: “சென்னை 28 படத்தில் நான் பணியாற்றும்போது மிர்ச்சி சிவாவும் அதில் நடித்திருந்தார். அவருடைய திறமை இன்னும் வெளிப்படவில்லை என்று தான் நான் கருதுகிறேன். நல்ல தருணத்திற்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவர் வெல்வார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தயாரிப்பாளர் சி.வி.குமாரிடம் நான் முதல் பட வாய்ப்பு பெற்றது தனி கதை. நானும் என்னுடைய நண்பரும் இணைந்து எங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் அவருக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி, அதன் மூலமாக வாய்ப்பு பெற்றோம். அது மறக்க இயலாத நிகழ்வு. பின்னர் நான் சந்தோஷ் நாராயணனை சந்தித்தேன். அவர் கொடுத்த ட்யூன்கள் எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு வேறு மாதிரியான இசை வேண்டும் என்று கேட்டேன். அவர் அதற்கும் தயாராக இருந்தார்.
இன்று அவர் தனித்துவமான அடையாளத்துடன் இருக்கிறார். இதற்காக அவர் கடுமையாக உழைத்தார். இன்று புதிய சினிமா உருவாக்க வேண்டும் என்று நினைக்கும் படைப்பாளிகளுக்கு அவர்தான் முதல் தேர்வு. அவருடைய திறமையை கண்டெடுத்த சி. வி.குமாருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு பா.ரஞ்சித் பேசினார்.