அகர்தலா: வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைக் கண்டித்து, வங்கதேசத்தவர்களுக்கு உணவு வழங்க திரிபுரா ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. அங்குள்ள இஸ்கான் கோயில் மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வங்கதேசத்தின் இந்து விரோதப் போக்கைக் கண்டித்து, அந்நாட்டிலிருந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுபோல திரிபுரா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையும் வங்கதேசத்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் திரிபுரா மாநில ஓட்டல் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் அகர்தலாவில் நடைபெற்றது.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் சைகத் பந்தோபாத்யாய் கூறும்போது, “இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து மதத்தினர் மீதும் நாங்கள் மரியாதை வைத்துள்ளோம். ஆனால் வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மை இந்துகள் அங்குள்ள மத அடிப்படைவாதிகளால் அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர். எங்கள் தேசியக் கொடி அங்கு அவமதிக்கப்படுகிறது. அங்கு நிலைமை மோசமாக உள்ளது. இந்த செயலை கண்டிக்கும் வகையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு உணவு வழங்கவதில்லை என முடிவு செய்துள்ளோம்” என்றார்.