‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக்கை வாங்கியிருக்கிறது ‘விஜய் 69’ படக்குழு. அதற்கான காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.
தெலுங்கில் அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலையா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பகவந்த் கேசரி’. இப்படத்தின் ரீமேக் தான் ‘விஜய் 69’ என்று தகவல் வெளியானது. ஆனால் படக்குழுவினரோ இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் விஜய் கடைசியாக நடிக்கும் படம் ரீமேக்காக இருக்காது என பலரும் கருதுகிறார்கள்.
உண்மையில் என்ன நடந்தது என்று விசாரித்த போது, ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் உரிமையினை ‘விஜய் 69’ படக்குழுவினர் வாங்கியிருப்பது உண்மை தான். ஆனால், படத்தின் கதை, திரைக்கதைக்கும் அதற்கும் சம்மந்தமில்லை. சில காட்சிகள் ஒன்று போல் அமைந்துவிட்டதால் இந்த முடிவினை எடுத்துள்ளது படக்குழு. சில காட்சிகள் என்றாலும் கிண்டலுக்கோ, எந்தவித இறுதிகட்ட சட்டச் சிக்கலோ இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது படக்குழு.
இப்போது சென்னையில் அரங்குகளில் சில முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் சில காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு. ஹெச்.வினோத் இயக்கி வரும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வரும் இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது.