தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள நடராஜர் அருங்காட்சியகத்தில் விலை மதிப்பில்லாத ஐம்பொன் நடராஜர் சிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களின் கட்டிடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக திகழும், தஞ்சாவூர் பெரிய கோயிலை பார்க்க உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து, அங்குள்ள சிற்பங்கள், சிலைகள், கல்வெட்டுகளை பார்த்து, ரசித்து, வியந்து செல்கின்றனர்.
தஞ்சாவூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலுக்கு அடுத்தபடியாக, தஞ்சாவூர் அரண்மனைக்கு சென்று அங்குள்ள உலகப் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகம், தர்பார் ஹால், 7 நிலை கொண்ட சார்ஜா மாடி கோபுரம், ஆயுத கோபுரம், மணிகோபுரம் மற்றும் கலைக்கூடம் ஆகியவற்றை கண்டுகளித்து வருகின்றனர். இதில், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கி.பி.9-ம் நூற்றாண்டு முதல் 11-ம் நூற்றாண்டு வரையிலான ஐம்பொன் சிலைகள், தஞ்சாவூர் கலைக்கூடத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இதில், அங்கேயே நடராஜர் சிலைகள் மட்டும் அடங்கிய தனி அருங்காட்சியகம் ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில், 2 அடி முதல் 5 அடி வரையிலான 31 நடராஜர் சிலைகள் மற்றும் சிவகாமி அம்மனுடன் கூடிய ஐம்பொன் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் எங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன, எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பன போன்ற விவரங்கள் சிறு குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சிலை வைக்கப்பட்டுள்ள பீடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்தச் சிலை தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ள க்யூ ஆர் கோடு வசதியும் உள்ளது.
இதனால், வெளிநாடுகளில் உள்ள தனியார் அருங்காட்சியகத்துக்கு நிகராக இந்த அருங்காட்சியகம் சுற்றுலா பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரண்மனை வளாகத்தில் உள்ள கலைக்கூடத்தில் ரூ.50 நுழைவுக் கட்டணம் செலுத்தினால், கலைக்கூட அருங்காட்சியகம் மற்றும் நடராஜர் அருங்காட்சியகம் ஆகியவற்றையும் கண்டுகளிக்கலாம். இந்த நடராஜர் அருங்காட்சியகத்தில், ஒவ்வொரு சிலையும் கண்ணாடி கூண்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதில், 3 பக்கங்கள் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு பக்கம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது.
இந்த அருங்காட்சியகத்துக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்லும் நிலையில், விலை மதிப்பில்லாத இந்த ஐம்பொன் சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடனேயே பணியாற்றி வருகின்றனர். எனவே, சிலைகளை பாதுகாக்க முழுமையாக கண்ணாடிகளை கொண்டு மூடி வைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.