சென்னை: புயல், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி வெளியாகிறது.
‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ படங்களை இயக்கிய என்.ராஜசேகர் அடுத்து இயக்கியுள்ள படம், ‘மிஸ் யூ’. இதில் சித்தார்த் ஹீரோவாக நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத், ஜேபி, பொன்வண்ணன், கருணாகரன், நரேன், அனுபமா, ரமா, பாலசரவணன், மாறன் என பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 7 மைல்ஸ் பர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ளார்.
இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படம் கடந்த நவம்பர் 29-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், “அரசு விடுத்துள்ள புயல் எச்சரிக்கை காரணமாகவும், மக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டும், ‘மிஸ் யூ’ திரைப்பட வெளியீட்டை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்” என படக்குழு ரிலீஸை தள்ளிவைத்தது. இந்நிலையில் இந்தப் படம் வரும் டிசம்பர் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சூது கவ்வும் 2’ படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.