இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் வரும் 6-ம் தேதி பகலிரவாக நடைபெற உள்ளது. இந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணியின் தொடக்க யஷஸ்வி ஜெய்ஸ்வால், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
22 வயதான ஜெஸ்வால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் 161 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். இந்த காலண்டர் ஆண்டில் ஜெய்ஸ்வால் இதுவரை 3 சதங்கள், 7 அரைசதங்களுடன் 58.18 சராசரி மற்றும் 72.52 ஸ்டிரைக் ரேட்டுடன் 1,280 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவரது அதிகபட்ச ரன் குவிப்பு 214 ஆகும்.
இந்த வகையில் காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு மேற்கொண்டு 282 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. சச்சின் கடந்த 2010-ம் ஆண்டில் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7 சதங்கள், 5 அரை சதங்களுடன் 1,562 ரன்களை 78.10 சராசரியுடன் குவித்திருந்தார். இந்த சாதனையை ஜெய்ஸ்வால் தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முறியடிப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது.
உலக அரங்கில் காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியில் பாகிஸ்தானின் முகமது யூசுப் உள்ளார். அவர், 2006-ம் ஆண்டு 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 99.33 சராசரியுடன் 1,788 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இதில் 9 சதங்கள், 3 அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன்கள் 202 ஆகும்.
விராட் கோலி: மறுபுறம் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்யும் முனைப்பில் உள்ளார். எதிரணியின் சொந்த மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சாதனை டான் பிராட்மேன் வசம் உள்ளது. அவர், இங்கிலாந்துக்கு எதிராக அவர்களது மண்ணில் சர்வதேச கிரிக்கெட்டில் 11 சதங்கள் விளாசியிருந்தார்.
இந்த சாதனையை சமன் செய்ய விராட் கோலிக்கு இன்னும் ஒரு சதம் மட்டுமே தேவையாக உள்ளது. அவர், ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணிக்கு எதிராக இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 10 சதங்களை விளாசி உள்ளார். அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் அடிக்கும் பட்சத்தில் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்யக்கூடும்.