புதுடெல்லி: குடியுரிமை குறித்து குற்றம்சாட்ட முடியாத ஆதாரங்கள் இருந்தபோதிலும், பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் வெளிநாட்டவரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டா அல்லது இல்லையா என்ற சட்ட கேள்வியை உச்ச நீதிமன்ற விசாரணையின்போது பிஹார் தேர்தல் ஆணையம் எழுப்பியுள்ளது.
பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் பில்டு ராய் எனும் பிலத் ராய் என்ற பிலத் பிரசாத் யாதவ். 2006-07-ல் நேபாள குடிமகனாக இருந்த அவரிடம் 1996 அக்டோபர் 25 முதல் 2006 அக்டோபர் 24 வரை செல்லுபடியாக கூடிய இந்திய பாஸ்போர்ட் இருந்தது. ஆனால், அதன்பிறகு, அவர் அந்த பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பிக்கவில்லை. கடந்த 2016 மார்ச் மாதத்தில் தனது நேபாள குடியுரிமையை கைவிடுவதாக கோரி அந்நாட்டு அதிகாரிகளிடம் விண்ணப்பம் அளித்தார்.
ஆனால், இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்காமல் பிஹார் பஞ்சாயத்து தேர்தலில் கடந்த 2021 அக்டோபரில் போட்டியிட்டு டிசம்பரில் பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பிலத் பிரசாத் யாதவ் இந்த உண்மையை மறைத்து தேர்தலில் போட்டியிட்டதற்காக அவரை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. இதனை எதிர்த்து பிலத் பிரசாத் யாதவ், பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஒரு நபரின் குடியுரிமையை மத்திய அரசு மட்டுமே தீர்மானிக்க முடியும். தேர்தல் சர்ச்சையைத் தவிர்த்து, தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஒரு வேட்பாளரை தகுதி நீக்கம் செய்வதை முடிவு செய்யும் அதிகாரம் மாநில தேர்தல் ஆணையத்துக்கு (எஸ்இசி) இல்லை, எனவே, பிலத் பிரசாத் யாதவை தகுநீக்கம் செய்யும் பிஹார் மாநில தேர்தல்ஆணையத்தின் முடிவை ரத்து செய்வதாக பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பினை எதிர்த்து பிஹார் மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குடியுரிமை பற்றி குற்றஞ்சாட்ட முடியாத சான்றுகள் இருந்தபோதிலும், கிராம பஞ்சாயத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட வெளிநாட்டு நபரை தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் எஸ்இசி-க்கு இல்லையா என்ற சட்ட கேள்வியை உச்ச நீதிமன்றத்தில் பிஹார் மாநில தேர்தல் ஆணையம் எழுப்பியது.
இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒரு தரப்பாக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள் டிசம்பர் 9-ம் தேதிக்குள் இதுகுறித்து பதிலளிக்க வேண்டும் என கோரி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.