திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலின் பிரம்மோற்சவ விழாக்களில், கடந்த 32 ஆண்டுகளாக ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த ‘ஸ்ரீ வைஷ்ணவ’ தன்னார்வ தொண்டு சேவகர்கள், அரங்கனை சுமந்த தோள்களில் தாயாரின் வாகனத்தையும் சுமந்து சாதனை படைத்து வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தாயாருக்கு 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த மாதம் 28-ம் தேதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இவ்விழா வரும் 6-ம் தேதி பஞ்சமி தீர்த்த நிகழ்ச்சியுடன் நிறைவுற உள்ளது. காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் தாயாரின் வாகன சேவை நிகழ்ச்சி இங்கு பிரசித்தி பெற்றதாகும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டு வருகின்றனர். இதில் விசேஷம் என்னவெனில், கடந்த 32 ஆண்டுகளாக இந்த பிரம்மோற்சவத்தில் வாகன சேவையின்போது, தாயாரை மாட வீதிகளில் சுமார் 2 மணி நேரம் வரை சுமந்து செல்வது ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த ‘ஸ்ரீ வைஷணவ’ தன்னார்வ தொண்டு சேவகர்கள்தான். ஸ்ரீ கந்தன் என்பவரின் தலைமையில் செயல்படும் இந்த தன்னார்வ சேவகர்கள் மொத்தம் 52 பேர் அடங்கிய குழுவாக உள்ளனர்.
இவர்களில் பலர் தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், ரயில்வே, வங்கி மேலாளர்கள், ஊழியர்கள் என பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும், பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்துக்காக தங்களின் பணிக்கு விடுப்பு எடுத்துவிட்டு கண்டிப்பாக ஆஜராகி விடுவார்கள்.
ஒவ்வொரு வாகன சேவையிலும் பங்கேற்கும் வாகனங்களின் கீழ் 3 வரிசை கொண்ட 28 அடி நீள உருளைக்கட்டைகள் இருக்கும். குறுக்கே 2 கட்டைகளும் இருக்கும். இதற்கு மேல் தாயார் பங்கேற்கும் வாகனம் மற்றும் தாயார் இருப்பார்கள். மேலும், 2 வேத பண்டிதர்களும், திருக்குடையை பிடிக்க மேலும் இருவர் என மொத்தம் 4 பேர் வாகனத்துடன் வருவார்கள். இவை மொத்தம் சுமார் 2,500 கிலோ எடை உள்ளதாக இருக்கும். இதனை சுமார் 2 மணி நேரம் வரை மாட வீதிகளில் சுமந்து செல்ல வேண்டும். ஆங்காங்கே ஆரத்தி எடுக்கும் இடங்களில் இவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். இந்த புனிதமான வேலையை கடந்த 32 ஆண்டுகளாக பிரம்மோற்சவம் நடைபெறும் 9 நாட்களில் இருவேளையும் இவர்கள் செய்து வருகின்றனர்.
இதில் தேர்த்திருவிழாவும், தங்கத் தேரோட்டமும் மட்டும் விதிவிலக்காகும். இதேபணியை இவர்கள் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் இவர்கள் செய்து வருகின்றனர். ரங்கநாதரை சுமக்கும் இந்த தோள்களில் பத்மாவதி தாயாரையும் இவர்கள் சுமக்கின்றனர். இந்த சேவையை இவர்கள் தங்களின் பூர்வ ஜென்ம புண்ணியமாக கருதுகின்றனர்.