அடிலெய்டு: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் வரும் டிசம்பர் 6-ம் தேதி பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் அடிலெய்டு நகரில் விளையாட உள்ளன. பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 295 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. இதனால் அந்த அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 0-1 என பின்தங்கி உள்ளதால் நெருக்கடியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியை அணுகுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேனான ஸ்டீவ் ஸ்மித் கூறும்போது, “பிங்க் பந்து டெஸ்ட் போட்டியானது, நீங்கள் பேட்டிங் செய்யும் வரிசை, விளையாட்டின் நிலைமை மற்றும் பந்தின் தன்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பொறுத்தும் பகல் அல்லது இரவின் வெவ்வேறு நேரங்களில் சவாலாக இருக்கும். இதனால் என்ன நடக்கிறது என்பதை அறிந்து செயல்படவேண்டும். பிங்க் பந்து சில நேரங்களில் கொஞ்சம் கணிக்க முடியாததாக இருக்கும். இதனால் கவனமுடன் செயல்பட வேண்டும்” என்றார்.