புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் 40 கோடி பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இவர்களை வரவேற்க அந்நகரம் தயாராகி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுகிறது. இது உலகின் மிகப்பெரிய ஆன்மிக, கலாச்சார மற்றும் மத நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக உலகம் முழுவதுதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் பிரயாக்ராஜில் வரும் 2025 ஜனவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா, 45 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி 40 கோடிபக்தர்கள் பிரயாக்ராஜ் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களை வரவேற்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளை உ.பி. அரசும் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சகமும் செய்து வருகின்றன.
பிரயாக்ராஜ் முழுவதும் சுவர் ஓவியங்கள் தீட்டவும் கலை அலங்கார வளைவுகள் மற்றும் காட்சிகளை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா தொடர்பாக பல்வேறு வகையான கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
உதாரணமாக, இந்திய தொல்லியல் துறை, இந்திரா காந்தி தேசிய கலை, அருங்காட்சியகம் மற்றும் ஆவணக் காப்பக மையம் ஆகியவை இணைந்து கையெழுத்துப் பிரதிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளன. தேசிய நாடகப் பள்ளி சார்பில் கும்பமேளாக்கள் தொடர்பான நாடகங்களை அரங்கேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
10 ஆயிம் பேர் அமரும் வகையில் கங்கா பந்தலும் தலா 4 ஆயிரம் பேர் அமரும் வகையில் 3 முக்கிய இடங்களிலும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன. இவற்றில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரபலங்கள், பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கலாச்சார ஆவணப் படங்களை திரையிடவும் மத்திய, மாநில அரசுகளும் திட்டமிட்டுள்ளன.