மும்பை: மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என வீடியோ வெளியிட்ட சையது சுஜா மீது மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றது. இந்நிலையில், சையது சுஜா என்பவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மகாராஷ்டிர தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களில் (இவிஎம்) தன்னால் முறைகேடு செய்ய முடியும் என கூறியிருக்கிறார்.
இதுகுறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி (சிஇஓ) மும்பையின் இணைய குற்றப் பிரிவு காவல் துறையில் புகார் செய்தார். அதில், “சையது சுஜா இவிஎம் குறித்து தவறான, அடிப்படை ஆதாரமற்ற தகவலை தெரிவித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில், சையது சுஜ மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் கீழ் மும்பை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிர தலைமைத் தேர்தல் அதிகாரி தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், “சையது சுஜா இவிஎம் மீது கடந்த 2019-ம் ஆண்டும் இதே புகாரை கூறினார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கொடுத்த புகாரின் பேரில் சுஜா மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த நபர் இப்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்” என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், டெல்லி மற்றும் மும்பை போலீஸார் இணைந்து சையது சுஜாவுடன் தொடர்பில் இருப்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.