புதுடெல்லி: ஃபெஞ்சல் புயல், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க அனுமதி கோரி திமுக சார்பில் மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே 30-ம் தேதி இரவு 10.30 முதல் 11.30 மணி அளவில் கரையைக் கடந்தது. இதன் காரணமாக புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் 51 செ.மீ. புதுச்சேரியில் 49 செ.மீ. புதுச்சேரியின் பத்துக்கண்ணுவில் 45 செ.மீ. திருக்கனூரில் 43 செ.மீ. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 37 செ.மீ. நேமூரில் 35 செ.மீ. புதுச்சேரி பாகூர், விழுப்புரம் மாவட்டம் வல்லத்தில் 32 செ.மீ. செம்மேடில் 31 செ.மீ. வளவனூர், கோலியனூரில் 28 செ.மீ. விழுப்புரத்தில் 27 செ.மீ. செஞ்சி, கெடாரில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
புதுச்சேரி அருகே நிலைகொண்டிருந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு திசையில் நகர்ந்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (டிச.2) நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திருச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
ஒத்திவைப்பு தீர்மானம்: ஃபெஞ்சல் புயல், கனமழையால் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என பல மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் பயிர்கள் பலத்த சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில், புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பு வேண்டும் என வலியுறுத்தியும், புயல் பாதிப்புகள் குறித்து அவையில் விவாதிக்க அனுமதி கோரியும் மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளார்.