புதுச்சேரி: கொட்டும் மழைக்கு நடுவில் பொது சட்ட நுழைவுத் தேர்வான கிளாட் புதுச்சேரியில் நடந்தது. மழை வெள்ளத்தை பொருட்படுத்தாமல் பல மாவட்டங்களில் இருந்து வந்து மாணவ, மாணவியர் தேர்வை எழுதினர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரியில் கனமழை பரவலாக பெய்தது. நகரெங்கும் சாலைகளில் வெள்ளம் சுழ்ந்துள்ளதால் வெளியில் செல்லமுடியாத நிலை நிலவுகிறது. இந்நிலையில், தேசிய சட்டக்கல்லூரிகளில் சேர பொது சட்ட நுழைவுத் தேர்வான கிளாட் இன்று நாடு முழுவதும் நடைபெற்றது.
கொட்டும் மழைக்கு நடுவில் புதுச்சேரி சட்டக்கல்லூரி மையத்தில் பொது சட்ட நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. இதில், புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மட்டுமில்லாது பல மாவட்டங்களில் கல்வி பயிலும் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் இத்தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது
மழை வெள்ளத்தை தாண்டி தேர்வு எழுத பலரும் புதுச்சேரி தேர்வு மையத்துக்கு வந்தனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறியதாவது, தேர்வு எழுத 250 பேர் வரை ஹால்டிக்கெட் அனுப்பப்பட்டிருந்தது. சுமார் 50 பேர் வரை தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத வந்த மாணவர்களுடன் வந்த பெற்றோர்கள் அமர அறை வசதி ஏற்பாடு செய்யபட்டிருந்தது என்று கூறப்படுகிறது.