ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘பீலிங்ஸ்’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் ‘புஷ்பா 2: தி ரூல்’. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். தமன் பின்னணி இசை அமைக்கிறார். இதன் முதல் பாகம் பெற்ற வரவேற்பால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் டிச.5 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த சூழலில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘பீலிங்ஸ்’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழில் விவேகாவின் வரிகளில், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி பாடியுள்ளனர். முதல் பாகத்தில் ‘சாமி, சாமி’ பாடல் பெற்ற பிரம்மாண்ட வரவேற்பு காரணமாக இப்பாடலையும் அதே ஸ்டைலில் தேவிஸ்ரீ பிரசாத் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
எனினும் அந்த பாடலைப் போல முதல் முறை கேட்கும்போதே இந்த பாடல் ஈர்க்கத் தவறுகிறது. எனினும் படம் வெளியான பிறகு இன்னும் பரவலாக கவனம் பெறக்கூடும் என்று தோன்றுகிறது. இந்த பாடலின் ஹைலைட்டே அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவின் வித்தியாசமான நடனம்தான். முதல் பாகத்தில் இடம்பெற்ற விநோதமான நடன ஸ்டெப்புகள் இதிலும் இடபெற்றுள்ளன. இவை இன்ஸ்டா ரீல்ஸ்களில் பலராலும் பிரதியெடுக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. ‘பீலிங்ஸ்’ லிரிக்கல் வீடியோ: