ஸ்ரீநகர்: “வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது போல இந்தியாவிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன” என்று மெகபூபா முஃப்தி பேசிய கருத்துகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
மக்கள் ஜனநாயகக் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவரும் முன்னாள் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி, “வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுறது. அதே போல இந்தியாவிலும் சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அப்படியென்றால் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் என்ன வித்தியாசம்? இரு நாடுகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை.
நம்முடைய நாடு அதன் மதச்சார்பற்ற கொள்கைகளுக்காக உலக அளவில் அறியப்படும் மிகச்சிறந்த நாடு. ஆனால் சம்பல் மசூதி விவகாரம் துரதிர்ஷ்டவசமானது. கடைகளில் வேலை செய்து கொண்டிருந்த சிலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அஜ்மீர் தர்கா என்பது அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களும் வந்து வணங்கிச் செல்லும், சகோதரத்துவத்துக்கு அடையாளமாக விளங்கும் ஒரு இடம். ஆனால் அங்கும் கூட கோயிலை தேட சிலர் முயற்சி செய்கின்றனர்” இவ்வாறு முஹபூபா முஃப்தி தெரிவித்தார்.
முஃப்தியின் இந்த பேச்சுக்கு ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா கண்டனம் தெரிவித்துள்ளார். “வங்கதேசத்தின் நிலைமையை இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பேசிய மெகபூபாவின் சர்ச்சைக்குரிய அறிக்கை முற்றிலும் தவறானது மற்றும் கண்டிக்கத்தக்கது. வங்கதேசத்தில் சிறுபான்மை சமூகம் தாக்குதல்களை எதிர்கொள்வது, பெண்கள் அவமதிக்கப்படுவது மற்றும் பிரதமரே நாட்டை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்படுவது போன்ற மோசமான மனித உரிமை மீறல்களை உலகம் அறியும்” என்று அவர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் பலரும் முஹபூபா முஃப்தியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.