புதுடெல்லி: “ரயில்களில் ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளியை மாதம் 2 முறை துவைக்கிறோம்” என்று வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு கம்பளி போர்வை வழங்கப்படுகிறது. ஆனால், அவற்றை அவ்வப்போது துவைப்பதில்லை, அழுக்காகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் பயணிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர். இதுகுறித்து வடக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஹிமந்சு சேகர் நேற்று கூறியதாவது: ஏசி பெட்டிகளில் செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் கம்பளிகளின் தரம், சுகாதாரத்தை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மாதம் 2 முறை கம்பளிகளை துவைத்து தூய்மைப்படுத்துகிறோம். அத்துடன் கிருமி நாசினியாக சூடான நாப்தலின் ஆவி மூலம் கம்பளிகளை தூய்மைப்படுத்துகிறோம். விரைவில் யுவி ரோபோடிக் இயந்திரம் மூலம் கம்பளிகளை துவைத்து சுத்தப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்த இருக்கிறோம்.
முதல் கட்டமாக யுவி ரோபோடிக் கருவி மூலம் சுத்தப்படுத்திய கம்பளிகளை ஜம்மு மற்றும் திப்ருகர் ராஜ்தானி ரயில்களில் பயணிகளுக்கு வழங்கி வருகிறோம். ஒவ்வொரு முறை ரயில் சேரும் இடத்தை அடைந்தவுடன் உடனடியாக கம்பளிகள் இந்த முறையில் சுத்தப்படுத்தப்படுகின்றன. புற ஊதாக் கதிர்கள் மூலம் கம்பளிகளில் உள்ள கிருமிகளை அழிக்க இந்த முறையில் தூய்மைப்படுத்தும் பணி நடக்கிறது.
கடந்த 2010-ம் ஆண்டுக்கு முன்பு ரயில்களில் வழங்கப்படும் கம்பளிகள் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒரு முறை துவைக்கப்பட்டன. அதன்பிறகு இந்த நடைமுறை மாதம் ஒரு முறையாகி இப்போது மாதத்துக்கு 2 முறை என கம்பளிகள் துவைக்கப்படுகின்றன. இவ்வாறு ஹிமந்சு சேகர் கூறினார்.
நாடு முழுவதும் ரயில் பயணிகளுக்கு தினமும் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கம்பளிகள் வழங்கப்படுகின்றன. வடக்கு ரயில்வேயில் மட்டும் தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கம்பளிகள் வழங்கப்படுகின்றன.