பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார், விக்னேஷ் சிவன். இதை செவன் ஸ்கிரீன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், எக்ஸ் தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென தனது எக்ஸ் தளப் பக்கத்தைச் செயலிழக்க வைத்துவிட்டு வெளியேறியுள்ளார்.
அவர் வெளியேற அதிகளவில் எதிர்ப்பு கிளம்பியதே காரணம் என கூறப்படுகிறது. நயன்தாரா ஆவணப்படம் தொடர்பாக, நடிகர் தனுஷுக்கு எதிரான அறிக்கை தொடர்பான பிரச்சினையில் அவர் ரசிகர்கள், விக்னேஷ் சிவனை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் பிரபல திரைப்பட விமர்சகர் ஒருவர், பான் இந்தியா இயக்குநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார். பான் இந்தியா இயக்குநர்களுக்கான நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டது எப்படி? என கேள்வி எழுப்பிய நெட்டிசன்கள், அவரை தரக்குறைவாக விமர்சித்தனர். இதனால் கோபமடைந்த அவர், எக்ஸ் தளத்தை விட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இது பற்றி விக்னேஷ் சிவன் ஏதும் தெரிவிக்கவில்லை.