மும்பை: பங்குச் சந்தை விதிகளை மீறியதாகக் கூறி ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனத்துக்கு செபி ரூ.9 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் செக்யூரிட்டிஸ் நிறுவனம் (ஆர்எஸ்எல்) பங்குத் தரகு சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், ஆர்எஸ்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர்களின் கணக்குகள், பதிவுகள் மற்றும் பிற ஆவணங்களை தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ) மற்றும் மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பங்குத் தரகர்களின் விதிகள், என்எஸ்இ பியூச்சர் அன்ட் ஆப்ஷன் வர்த்தக விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்டறிய, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 டிசம்பர் வரையிலான காலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விதிகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்ததால், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஆர்எஸ்எல் நிறுவனத்துக்கு பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) நோட்டீஸ் அனுப்பியது.
இதை ஒப்புக் கொண்ட ஆர்எஸ்எல் நிறுவனம், தவறுகளை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதில் அளித்திருந்தது. எனினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த செபி, ஆர்எஸ்எல் நிறுவனத்துக்கு ரூ.9 லட்சம் அபராதம் விதித்து நேற்று உத்தரவிட்டது.