கிறைஸ்ட் சர்ச் டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான இன்று இங்கிலாந்து தன் முதல் இன்னிங்சில் 499 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஹாரி புரூக் 197 பந்துகளில் 171 ரன்களை அதிரடியாக விளாச இங்கிலாந்து 151 ரன்கள் முன்னிலை பெற்றது.
நியூஸிலாந்தின் ஆச்சரியத்தகுந்த சாதனை என்னவெனில், மொத்தம் 8 கேட்ச்களை இந்த இன்னிங்ஸில் கோட்டை விட்டனர். அதில் ஹாரி புரூக்கிற்கு மட்டும் 5 கேட்ச்களை விட்டு ஒரே வீரருக்கு அதிகக் கேட்ச்களை விட்டதில் விந்தையான புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
நேற்று 319/5 என்று இன்று தொடங்கிய இங்கிலாந்து அணியில் புரூக்132 ரன்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடனும் தொடங்கினர். இவர்கள் பார்ட்னர்ஷிப் 86வது ஓவர் வரை நீடிக்க இருவரும் 159 ரன்களை 33 ஓவர்கள்ல் அதிரடியாகச் சேர்த்தனர். 5 லைஃப்களுடன் ஹாரி புரூக் 171 ரன்களில் 15 பவுண்டரி 3 சிக்சர்களுடன் ஆட்டம் இழந்தார். ஹென்றி பந்தை விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பென் ஸ்டோக்ஸ் 146 பந்துகளில் 80 ரன்களை 9 பவுண்டரிகளுடன் எடுத்து ஹென்றி பந்தை லாங் ஆன் மேல் தூக்கி அடிக்க நினைத்தார், ஆனால் பந்து ஸ்லோ பந்தானதால் சவுதியிடம் கேட்ச் ஆனது கிறிஸ் வோக்ஸை சவுதி 1 ரன்னில் வெளியேற்றினார்.
பென் ஸ்டோக்சை ஒருமுனையில் நிற்க வைத்தே கஸ் அட்கின்ஸன் கடும் ஆக்ரோஷ ஆட்டம் ஆடி 36 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 48 ரன்களை விளாசி நேதன் ஸ்மித்திடம் ஆட்டமிழந்தார். இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் 24 பந்துகளில் 2 பவுண்டரிகல் 3 சிக்சர்களுடன் 33 ரன்களை விளாசித்தள்ளினார்.
ஷோயப் பஷீர் 5 ரன்களில் ஹென்றியிடம் ஆட்டமிழக்க ஹென்றி 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அறிமுக பவுலர் செம சாத்து வாங்கினார், இவர் ஒரு கட்டத்தில் 12 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இருந்தவர் கடைசியில் 26 ஓவர்கள் 141 ரன்கள் 3 விக்கெட் என்று பிய்த்து எறியப்பட்டார்.
இங்கிலாந்தின் ரன் ரேட் ஓவருக்கு 5 ரன்களுக்கு அருகில் 4.84 என்று இருந்தது. இன்னொரு விந்தையான நியூஸிலாந்து சாதனை மெக்கல்லம்-ஸ்டோக்ஸ் கூட்டணி அதிரடி ‘பாஸ்பால்’ காலக்கட்டத்தில் நியூஸிலாந்து 11 மெய்டன் ஓவர்களை வீசி சாதித்துள்ளது.
நியூஸிலாந்து சடுதியில் டெவன் கான்வே, லேதம் விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்கப்போராடி வருகிறது என்றே கூற வேண்டும்.