மூலவர், உற்சவர்: கர்ப்பபுரீசுவரர் / முல்லைவனநாதர்
அம்பாள்: கருகாத்த நாயகி/ கர்ப்பரட்சாம்பிகை
தல வரலாறு: நிருத்துவ முனிவர் தனது மனைவி வேதிகையுடன் வெண்ணாற்றின் கரையில் வசித்து வந்தார். ஒருநாள் முனிவர் வெளியே சென்றபோது, ஊர்த்துவபாத முனிவர் உணவு தேடி இவர்களின் குடிலுக்கு வந்தார். வேதிகா கர்ப்பமாக இருந்ததால், உணவு எடுத்துவர காலதாமதம் ஆனது. வேதிகா தன்னை அவமானப்படுத்துவதாக நினைத்த முனிவர், அவரை சபித்தார். இதனால் கரு இறந்துவிட்டது. வேதிகாவின் வேண்டுதலை ஏற்ற அம்பிகை, கர்ப்பரட்சாம்பிகையாக காட்சியருளி கருவை பானையில் வைத்து காத்தார். சரியான நேரத்தில் நைட்ருவன் என்ற குழந்தை பிறந்தது. அன்று முதல் குழந்தை வரம் அருளும் தெய்வமாக கர்ப்பரட்சாம்பிகை வணங்கப்படுகிறார்.
கோயில் சிறப்பு: திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற புண்ணியத் தலம் ஆகும். பிரம்மதேவர், கவுதமர் இங்கே தங்கி வழிபாடு செய்துள்ளனர். முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் புற்று மண்ணில் தானாகத் தோன்றியவர் என்பதால் முல்லைவனநாதருக்கு அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டுமே சாத்துவார்கள்.
சிறப்பு அம்சம்: பத்மபீடத்தில், அமைதி உருவமாக, சிறிய புன்னகையுடன் அன்னை எழுந்தருளி இருக்கிறார். அன்னையின் நான்கு கரங்களுள் ஒன்று அவரது வயிற்றின் கீழே தொடுவது போல் உள்ளது. கர்ப்பத்தை ரட்சிக்கும் கோலம் போலும்! மறு கரம், அபயம் அளிக்கிறது. மேல் நோக்கி உயர்த்திய மூன்றாவது கரம் அக்கமாலையையும், அடுத்த கரம் தாமரையையும் தரித்துள்ளன. இங்குள்ள ஷீரகுண்டம் என்னும் பால் குளம், காமதேனுவின் கால் குளம்பால் ஏற்படுத்தப்பட்டதாகும்.
பிரார்த்தனை: அன்னையின் சந்நிதியில் நெய்யால் படி மெழுகிக் கோலமிட்டால், திருமணம் கூடிவரும். 48 நாட்கள் பிரசாத நெய்யை உண்டால் மகப்பேறு உண்டாகும். அம்பாள் பிரசாதமான விளக்கெண்ணெய்யை நம்பிக்கையுடன் தடவி வந்தால் சுகப்பிரசவம் ஆகும். முல்லைவனநாதருக்கு புனுகு சாத்தினால் தீராத தோல் நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.