புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் சம்பலில் இருந்த கல்வி அவதாரக் கோயிலை இடித்துவிட்டு ஜாமா மசூதி கட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, மசூதியில் நடத்தப்பட்ட களஆய்வின்போது கலவரம் மூண்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து சம்பலின் சிவில் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வு கழகம்(ஏஎஸ்ஐ) தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனு வில் கூறியிருப்பதாவது: கடந்த 1920-ம் ஆண்டு சம்பலின் மசூதி, ஏஎஸ்ஐயின் வரலாற்று சின்னமாக அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் அம்மசூதியை கண்காணிக்கும் பொறுப்பு ஏஎஸ்ஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 1998-ல் மட்டும் ஏஎஸ்ஐயால் மசூதியினுள் செல்ல முடிந்தது. அதன் பிறகு கடந்த ஜுலை மாதம் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உதவியால் உள்ளே சென்று பார்வையிட முடிந்தது. அப்போது சட்டவிரோதமாக பல கட்டுமானங்கள் கட்டப்பட்டிருப்பதை பார்க்க முடிந்தது. இது வரலாற்று சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் 1958-ஐ மீறும் செயல். மசூதியின் அடித்தளத்தையும் பல அறைகளாகப் பிரித்து கடைகளாக்கி மசூதி நிர்வாகத்தால் வாடகை வசூலிக்கப்படுகிறது.