புதுடெல்லி: ‘‘தோசை விற்பவர் மாதம் ரூ.6 லட்சம் சம்பாதித்தாலும் அரசுக்கு வரி செலுத்துவதில்லை’’ என்று எக்ஸ் வலைதளவாசி வெளியிட்ட பதிவு வைரலாகி உள்ளது.
நவீன் கோப்பாராம் என்பவர் தனது எக்ஸ் வலைதள கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘எனது வீட்டுக்கு அருகில் ஒருவர் தோசை விற்கிறார். அதன் மூலம் தினமும் ரூ.20,000 சம்பாதிக்கிறார். அப்படி பார்த்தால் மாதம் ரூ.6 லட்சம் வருவாய் கிடைக்கிறது. செலவுகள் அனைத்தையும் கழித்தால் கூட மாதந்தோறும் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.3.5 லட்சம் வரை அவருக்கு வருமானம் கிடைக்கும். ஆனால், அரசுக்கு அவர் வரி செலுத்துவதில்லை. ஆனால், மாதம் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கும் சம்பளதாரர் ஒருவர் அரசுக்கு 10 சதவீத வரி செலுத்துகிறார்’’ என்று கூறியுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அத்துடன் பெருநிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அல்லது சுய தொழில் செய்பவர்களுக்கும் உள்ள சாதக பாதகங்கள் குறித்து சமூக வலைதளங்களில் காரசாரமாக விமர்சனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியாவில் வருவாய்க்கு ஏற்ப வரி விதிப்பு முறையில் உள்ள குறைகள் குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சமூக வலைதள பதிவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘‘தோசை விற்பவரைப் பற்றி பேசுவதற்கு முன்னர், நகரில் உள்ள டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தேநீர் கடைக்காரர்கள், வியாபாரிகள் பற்றி பேசுவோம். அவர்களில் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர், வீட்டை அவ்வப்போது புதுப்பிக்கின்றனர். புதிய வாகனங்கள் வாங்குகின்றனர். ஆனால், அவர்களும் வரிசெலுத்துவதில்லை. இது எப்படி, ஏன்?’’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
மற்றொருவர் கூறும்போது, ‘‘அமைப்பு சாரா தொழிலாளர்கள் அல்லது சுய தொழில் செய்பவர்களுக்கு கார்ப்பரேட் இன்சூரன்ஸ் கிடையாது. கார், வீடு, பைக் வாங்க கடன் கிடைப்பது மிகக் கடினம். பி.எப். கிடையாது. உறுதிப்படுத்தப்பட்ட சம்பளம் கிடையாது. அதேநேரத்தில் அவர்கள் அதிகமாக ஜிஎஸ்டி செலுத்துபவர்களாக இருக்க கூடும். அப்படி அவர்கள் செலுத்தும் ஜிஎஸ்டி, ரூ.60 ஆயிரம் சம்பாதிப்பவர் செலுத்தும் வரியை விட அதிகமாக இருக்கும்’’ என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘‘ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் ட்விட்டர்வாசிகள், தாங்கள் செலுத்தும் வரியால்தான் இந்த நாடே இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் இருந்து வெளியில் வரவேண்டும்’’ என்று விமர்சித்துள்ளார்.