தஞ்சாவூர்: ‘தி இந்து’ குழும பதிப்பகம் சார்பில் ‘முருகனின் மகிமை போற்றும் அறுபடை வீடு’ (The Glory of Murugan and His Arupadai Veedu) என்ற தலைப்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல் வெளியீட்டு விழா சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது.
இந்த நூல் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றின் தனித்துவம், வரலாறு மற்றும் அனைத்து சிறப்பு அம்சங்களையும் விவரிக்கிறது. மேலும், பிரபல ஆன்மிக எழுத்தாளர்கள், தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
300-க்கும் மேற்பட்ட படங்கள்: இதுதவிர, தமிழகம் முழுவதும் உள்ள மேலும் பல பிரசித்தி பெற்ற முருகன் கோயில்கள் குறித்த தகவல்களும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. 300-க்கும் மேற்பட்ட புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த நூலை ‘தி இந்து’வின் ‘ஃப்ரைடே ரிவ்யூ’ பிரிவு முன்னாள் பொறுப்பாளர் கீதா வெங்கடரமணன் தொகுத்துள்ளார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலையில் உள்ள சுவாமிநாத சுவாமியின் திருவடியில் நேற்று மாலை இந்தப் புத்தகங்களை வைத்து, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து, ‘தி இந்து’ குழும இயக்குநர் ரோஹித் ரமேஷ் தமிழ் மற்றும் ஆங்கிலம் பதிப்பு நூல்களை வெளியிட்டார்.
இந்நிகழ்வில், ‘தி இந்து’ குழும துணைத் தலைவர் (விற்பனை மற்றும் விநியோகம்) தர் அரனாலா, இதழ்கள் மற்றும் சிறப்பு வெளியீடுகள் பிரிவு தலைவர் ஆர்.சீனிவாசன், முதுநிலைப் பொது மேலாளர் பாபு விஜய், திருச்சி பதிப்பு மேலாளர் கே.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நூலின் ஆங்கிலப் பதிப்பின் விலை ரூ.2,999 மற்றும் தமிழ் பதிப்பின் விலை ரூ.2,499. இந்த நூல்களை http://publications.thehindugroup.com/bookstore/ என்ற இணையதளத்துக்குச் சென்று The Hindu Group Bookstore மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கலாம்.