வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு
ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசை வழிபாட்டிற்காக நவம்பர் 28 முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நாட்களில் மலை பகுதியில் கனமழை பெய்தால் மட்டும் பக்தர்கள் கட்டுப்பாடு விதிக்கப்படும் என புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் தெரிவித்தார்.
இன்று மழை இல்லாததால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் வனத்துறை நுழைவு வாயில் வழியாக காலை 7 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.