பெங்களூரு: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் களம் இறங்கியுள்ளது ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம். அதன் அடையாளமாக ஹோண்டா ‘ஆக்டிவா e’ மற்றும் ‘QCI’ என இரண்டு மின்சார ஸ்கூட்டர்களை அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
ஜப்பான் நாட்டின் டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஹோண்டா நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் தான் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ). இந்தியாவில் ஹரியாணா, ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் குஜராத் என நான்கு மாநிலங்களில் உற்பத்திக் கூடம் இந்நிறுவனத்துக்கு அமைந்துள்ளது. இங்கிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து, இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
ஸ்போர்ட்ஸ் பைக் தயாரிப்பு பணியையும் கவனித்து வருகிறது. தற்போது மின்சார இருசக்கர வாகன தயாரிப்பையும் மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் பெருவாரியான இருசக்கர பிரியர்களை கவர்ந்த வாகனங்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். அந்த வகையில் தற்போது ‘ஆக்டிவா e’ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இது தவிர ஆக்டிவா ஸ்கூட்டரின் மற்றும் பிற வேரியண்ட்களை இந்திய சந்தையில் ஹோண்டா விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2001 முதல் ஆக்டிவா மாடல் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
1 லட்சம் புதிய மின்சார ஸ்கூட்டர் யூனிட்களை தயாரிக்க உள்ளதாக ஹோண்டா சிஇஓ ஸுட்ஸுமு ஓட்டானி மின்சார வாகன அறிமுகத்தின் போது தெரிவித்தார். அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் தங்கள் மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும், பிப்ரவரி முதல் டெலிவரி செய்யப்படும் என்றும் ஹோண்டா தெரிவித்துள்ளது.
‘ஆக்டிவா e’ சிறப்பு அம்சங்கள்: 1.5kWh திறன் கொண்ட இரண்டு மாற்றக்கூடிய பேட்டரி மூலம் வாகன ஓட்டிகளுக்கு விரைவான மற்றும் எளிதான ரீசார்ஜ் வசதி கிடைக்கிறது. இந்த மின்சார ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 102 கி.மீ தூரம் வரை பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எகானமி, ஸ்டாண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான ரைடிங் மோட் இதில் உள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6kW பார்மெனென்ட் மேக்னட் சிங்க்ரோனஸ் எலெக்ட்ரிக் மோட்டார் இதில் இடம்பெற்றுள்ளது.
7 இன்ச் டிஎஃப்டி ஸ்க்ரீன் டிஸ்பிளே, ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, அலாய் வீல், டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ஐந்து வண்ணங்களில் இந்த வாகனம் வெளிவந்துள்ளது.