வளரிளம் பருவம் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான, இன்றியமையாத வளர்ச்சிக் கட்டம். ஒருவர் தனது சமூகத் திறன், உணர்வுரீதியான புரிதல், மீளும் திறன் (Resilience) ஆகியவற்றை வளர்த்துக்கொள்ளக்கூடிய முக்கியமான பருவமும் இதுதான். ஆரோக்கியமான தூக்கம், சீரான உடற்பயிற்சி, சக மனிதர்களை உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்ளுதல், பிரச்சினைகளைச் சமாளிக்கும் திறன் போன்ற ஆரோக்கியமான மனநலப் பழக்கங்கள் இந்தப் பருவத்தில்தான் வளர்த்தெடுக்கப்படுகின்றன.
ஆனால், மனநலத்துக்கு ஊறு விளைவிக்கக் கூடிய போதைப் பழக்கம், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாவது போன்ற வற்றுக்கு அறிமுகமாகக்கூடிய பருவமும் இதுதான். இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளத் தேவையான மன உறுதியை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.
நல்வாழ்வுக்கான மனநலம்: பள்ளி, கல்லூரி படிப்பின்போது ஒரு புராஜெக்ட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்த புராஜெக்ட்டை முடிப்பதில் சில பிரச்சினைகள் ஏற்படலாம். பிரச்சினைக்கான காரணிகளைச் சரியாகக் கண்டறியாமல், தீர்வை நோக்கிச் செல்ல முயல்வதால் பலன் இருக்காது.
முதலில் பிரச்சினைக்கான காரணிகளைக் கண்டறிந்து பின்பு தீர்வை நோக்கிப் பயணப்பட வேண்டும். அதுபோல, மனநல ஆரோக்கியத்தை நோக்கிய பயணத்தில் மனநலம் என்றால் என்ன என்பதில் தொடங்கி மனநலப் பிரச்சினைகளுக்கான காரணிகளைத் தெரிந்துகொள்ளுதல் நல்லது.
ஆரோக்கியமான மனநலம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் இன்றியமையாத உந்துசக்தியாக இருக்கிறது. தனி மனிதனின் செயல்பாடு, உணர்வுகள் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகச் சிந்தனை விளங்குகிறது. தனி மனித நல்வாழ்வுக்கு மட்டுமன்றி சமூகநலம், சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒருவரின் மனநலம் இன்றியமையாததாகிறது. மனநலம் என்பது உடல் நலத்தைப் போல நல்வாழ்வைத் தீர்மானிக்கிறது.
மன ஆரோக்கியம் வேண்டுமா? – ஆரோக்கியமான மனநிலை என்பது தொடர்ச்சியான ஒரு செயல்முறை. ஒருவர், தனது வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் அந்தச் செயல் முறையின்போது ஏற்றத்திலோ இறக்கத்திலோ இருக்கலாம். மனநலத்தைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகளின் தாக்கத்தைப் பொறுத்து, மன ஆரோக்கியத்தில் மாறு பாடுகள் ஏற்படலாம். அப்படியானால் ஆரோக்கியமான மனநலத்தைத் தீர்மானிக்கும் காரணிகள் எவை என்கிற கேள்வி எழலாம்.
நாம் பிறந்து வளர்ந்த, வாழும் சூழ்நிலைகளைப் பொறுத்து மன ஆரோக்கியம் பெரிதும் வேறுபடும். மனநலம் என்பது தனி மனிதன், குடும்பம், சமூகக் கட்டமைப்புக் காரணிகளின் தொடர்புகளால் தீர்மானிக்கப்படுகிறது. குறிப்பாக, சமூகத்தில் நிலவும் பாலினச் சமத்துவமின்மை, சாதிய ஏற்றத் தாழ்வுகள் உள்ளிட்ட பரந்துபட்ட கட்டமைப்புக் கூறுகளும் ஒருவரின் மன ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உணவு, தண்ணீர், தங்குமிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் அனைவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்வது மன ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. இவ்வகையில் அரசின் சமூக – பொருளாதார கொள்கைகளும் மனிதர்களின் மனநலத்தைத் தீர்மானிக்கின்றன.
எனவே, ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி தோல்விகளுக்கு அவர் மட்டுமே காரணம் என்கிற பிம்பம் முதலில் உடைக்கப்பட வேண்டும். பல்வேறு புறக்காரணிகள் ஒருவரது மன நலத்தைத் தீர்மானிக்கின்றன என்பதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே கல்வியில், பணியில், வாழ்வில் ஏற்படும் நெருக்கடிகளையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும்போது அதீதக் குற்ற உணர்வுக்கும் கோபத்துக்கும் நீங்கள் இடம் அளிக்க மாட்டீர்கள். வாழ்க்கை பற்றிய எதிர்மறை எண்ணங்களும் ஏற்படாது, நீடிக்காது.
வகைப்படுத்துதல்: சில மனநல அறிகுறிகள் குறிப்பிடத்தக்க தீவிரத்துடன் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை முடக்கும் அளவில் இருந்தால் அவருக்கு மன நோய் இருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். இவற்றைச் சாதாரண மனநோய்கள் (எ.கா. Anxiety Disorder), தீவிரமான மன நோய்கள் (எ.கா. மனச்சிதைவு நோய்) என்று வகைப்படுத்தலாம். இவற்றைப் பற்றி பின்னர் பேசுவோம்.பொதுவாக மன நோய்களை மட்டுமே மனநலப் பிரச்சினைகள் என்று குறிப்பிட மாட்டோம்.
குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தால் ஒருவருக்கு மிதமான அறிகுறி களும், அதனால் அன்றாடச் செயல்பாடுகளில் இடர்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய நிலையும் ஏற்பட்டால், அதை மனநலப் பிரச்சினை என்று வரையறுக்கலாம். மனநோயாக வகைப்படுத்தும் அளவுக்கு அவை இல்லா விட்டாலும்கூடப் பாதிக்கப்பட்ட நபரால் மட்டுமே இதைச் சரிசெய்ய இயலாது.
கூடவே, மனநல மருத்துவ நிபுணர்களின் உதவியும் தேவைப்படும் என்பதால் இவற்றை மனநலப் பிரச்சினைகளாகக் கருதி தேவையான ஆலோசனைகளைப் பெற வேண்டும். வளரிளம் பருவத்தினரின் மனநல மேம் பாடு பற்றியும் இன்ஸ்டகிராம் யுகத்தில் இளைஞர்களின் மன ஆரோக்கியம், பெற் றோர்களின் பங்களிப்பு பற்றியும் அடுத்து தெரிந்துகொள்வோம்.
(தொடர்ந்து பேசுவோம்)