புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா (எம்என்எஸ்) கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. எனினும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 10 தொகுதிகள் இழக்க, அக்கட்சி காரணமாகிவிட்டது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கான 288 தொகுதிகளில் மகாயுதி 236-இல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. இதை எதிர்த்த மகா விகாஸ் அகாடி (எம்விஏ) வெறும் 48 பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளது. மகாயுதியில் பாஜக 132, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுக்கு 57 மற்றும் அஜித் பவாரின் தேசியவாதக் காங்கிரஸ் 41 பெற்றன. இவர்களில் ஷிண்டே கட்சிக்கு கூடுதலாக 10 தொகுதிகள் கிடைக்கும் வாய்ப்பை ராஜ் தாக்கரே பறித்துள்ளார்.
இந்த 10-ல் இரண்டாம் நிலை பெற்ற சிவசேனாவின் தோல்விக்கான வாக்கு வித்தியாசங்களை விட எம்என்எஸ் அதிகம் பெற்றுள்ளன. இதன் எண்ணிக்கை 6,062 முதல் 33,062 வாக்குகளாக இருந்தன. இதன் பின்னணியில் சிவசேனா, எம்என்எஸ் ஆகிய இரு கட்சிகளுமே இந்துத்துவா மற்றும் மராட்டியர் அரசியலை முன்னிறுத்தியது காரணமாயிற்று. இந்த 10 தொகுதிகளில் எம்விஏ-வின் உத்தவ் தாக்கரேயின் சிவசேனா யூபிடி, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் பிரிவின் என்சிபி ஆகியன வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக, உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரேவின் வெற்றிக்கும் எம்என்எஸ் கட்சி பெற்ற வாக்குகள் காரணமாகிவிட்டது.
இந்தத் தேர்தலில் எம்என்எஸ் கட்சியையும் மகாயுதியில் சேர்க்க தீவிர முயற்சி நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ராஜ் தாக்கரே உடன்படவில்லை. இதனால், எவருடனும் கூட்டணி சேராமல் 125 தொகுதிகளில் ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் தனித்து போட்டியிட்டது. இவற்றில் மும்பையின் 36-ல் 25 தொகுதிகளில் போட்டியிட்டது.
ராஜ் தாக்கரேவின் அரசியல் வாரிசாக அவரது மகன் அமீத் தாக்கரே முதன் முறையாகக் களம் இறக்கப்பட்டார். அமீத்துடன் சேர்த்து எம்என்எஸ் கட்சிக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்கவில்லை. கடந்த 2004 சட்டப்பேரவை தேர்தலில் மட்டும் மாஹிம் தொகுதியில் ஒருமுறை எம்என்எஸ் வெற்றி பெற்றிருந்தது.
ராஜ் தாக்கரேவை மகாராஷ்டிராவாசிகள் இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தொகுதியிலும் வெற்றி கிடைக்காத நிலையால் எம்என்எஸ் கட்சியின் ரயில் இன்ஜின் சின்னத்தை இழக்கும் அபாயமும் உருவாகிவிட்டது.
ஒவைஸிக்கு ஒரு தொகுதி: ஹைதராபாத் ஒவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சி, இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமுள்ள 16 தொகுதிகளில் போட்டியிட்டது. இவற்றில் ஒரே ஒரு தொகுதியாக மத்திய மாலேகாவ்னில் வெற்றி பெற்றுள்ளது.
புதிய முஸ்லிம் கட்சியான இஸ்லாம் வேட்பாளர் ஆசீப் ஷேக் ராஷீத்தை, ஏஐஎம்ஐஎம் கட்சியின் முப்தி முகம்மதி இஸ்மாயில், 162 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு நோட்டாவுக்கு 1089 வாக்குகள் பதிவாகி உள்ளன. இதர 15 தொகுதிகளில் ஒவைஸியின் வேட்பாளர்களால் எம்விஏக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட சட்டப்பேரவையில் ஒவைஸி கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.