திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் இன்று கார்த்திகை பிரம்மோற்சவம் தொடங்குவதை முன்னிட்டு நேற்று காலை லட்ச குங்குமார்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது.
புகழ்பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, டிசம்பர் 6-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, திருச்சானூர் மற்றும் திருப்பதி நகரங்கள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. திருப்பதி முதல் திருச்சானூர் வரை அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டு திருச்சானூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை கோயில் வளாகத்தில் உற்சவரான பத்மாவதி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடந்தன. மாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மாட வீதிகளில் விஸ்வக்சேனர் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இந்நிலையில் இன்று காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. இரவு சின்ன சேஷ வாகனத்தில் தாயார் 4 மாட வீதிகளில் எழுந்தருள உள்ளார். 29-ம் தேதி காலை பெரிய சேஷ வாகன சேவை, இரவு அன்ன வாகன சேவை நடைபெறுகிறது. 30-ம் தேதி காலை முத்துப் பல்லக்கு, இரவு சிம்ம வாகன சேவை, டிசம்பர் 1-ம் தேதி காலை கற்பகவிருட்ச வாகனம், இரவு ஹனுமன் வாகன சேவை நடைபெறுகிறது. 2-ம் தேதி காலை பல்லக்கு உற்சவமும், இரவு கஜ வாகன சேவையும் நடைபெறுகிறது. 3-ம் தேதி காலை சர்வபூபால வாகன சேவையும் அன்று மாலை தங்க தேரோட்டமும், இரவு கருட சேவையும் நடைபெறும். 4-ம் தேதி காலை சூரிய பிரபை, இரவு சந்திரபிரபை வாகன சேவையும், 5-ம் தேதி காலை தேர்திருவிழாவும், இரவு குதிரை வாகன சேவையும் நடைபெறும். நிறைவு நாளான 6-ம் தேதி காலை பல்லக்கு சேவையும், மதியம் 12.20 மணிக்கு பிரசித்தி பெற்ற பஞ்சமி தீர்த்த புனித நீராடலும் நடைபெற உள்ளன. மாலையில் கொடியிறக்க நிகழ்வுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு, போக்குவரத்து, தரிசன வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது. மாட வீதிகளில் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நடனக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.