சைபர் கிரைம் கும்பலின் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கி மும்பை ஐஐடி மாணவர் ஒருவர் ரூ.7 லட்சத்தை இழந்தார்.
இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்துள்ளது. எனினும் மும்பை பவாய் காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மும்பை ஐஐடியின் 25 வயது மாணவர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்து தன்னை டிராய் (தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அதிகாரி என்ற அறிமுகம் செய்துகொண்டுள்ளார். சட்டவிரோத செயல்கள் தொடர்பாக மாணவரின் செல்போன் எண்ணுக்கு எதிராக 17 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் செல்போன் எண் முடக்கப்படுவதை தடுக்க காவல் துறையிடம் இருந்து ஆட்சேபமின்மை சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவருடன் பேசுமாறும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வாட்ஸ்அப் அழைப்பில் போலீஸ் உடையில் வந்த ஒரு நபர், மாணவர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கு இருப்பதாக கூறி அவரை அச்சுறுத்தியுள்ளார். மேலும் கைது நடவடிக்கையை தவிர்க்க யுபிஐ மூலம் ரூ.29,500 அனுப்புமாறு கூறியுள்ளார்.
இப்பணத்தை பெற்ற பிறகு மாணவரை டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் கைது செய்துள்ளதாகவும் யாரிடமாவது பேசினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்துள்ளார். இதையடுத்து மாணவரின் வங்கிக் கணக்கு விவரத்தை பெற்ற அந்த நபர் அதிலிருந்து ரூ.7 லட்சத்தை மோசடி செய்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதன் பிறகு இணையத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் என டைப் செய்து தேடிய பிறகு தாம் மோசடி செய்யப்பட்டதை அந்த மாணவர் உணர்ந்தார். இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.