கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த ஏழு மாதங்களில் 18,38,925 பேர் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். கோவை விமான நிலையத்தில் தினமும் 30 முதல் 32 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான 7 மாதங்களில் மொத்தம் 11,960 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு பிரிவில் 17,09,193 பேர், வெளிநாட்டு பிரிவில் 1,29,732 பேர் என மொத்தம் 18,38,925 பேர் விமான நிலையத்தை பயன்படுத்தியுள்ளனர். விமானங்கள் இயக்கம் 10.8 சதவீத வளர்ச்சியையும், பயணிகள் எண்ணிக்கை 4.3 சதவீத வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கொங்கு குளோபல் போரம் (கேஜிஎப்) கூட்டமைப்பின் இயக்குநர் சதீஷ் கூறும்போது, “கோவை விமான நிலையத்தில் சர்வதேச பிரிவின் வளர்ச்சியில் புதிதாக தொடங்கப்பட்ட அபுதாபிக்கான நேரடி விமான சேவை குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளது.
கோவை – சிங்கப்பூர் விமான சேவை நேரத்தை மாற்றியமைத்தால் அந்த வழித்தடத்திலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏர் இந்தியா சார்பில் டெல்லி – ஐரோப்பா இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா தொடங்க வேண்டும். உள்நாட்டு பிரிவில் குளிர்கால அட்டவணையில் இண்டிகோ நிறுவனம் விமான சேவைகளை அதிகரித்துள்ளது. அதேபோல் டெல்லி, சென்னை, பூனே, பெங்களூரு நகரங்களுக்கு தேவை அதிகம் உள்ளதால் கூடுதல் விமான சேவைகள் வழங்கினால் பயன் தரும்” என்றார்.
தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் பட்டியலில் கோவை மாவட்டம் சிறப்பாக திகழ்வதால் ‘ஐடி’, உற்பத்தித் துறை, ‘மால்’கள் என பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய இந்தியா மட்டுமின்றி பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் அதிக ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வாசிக்க > ஐடி, உற்பத்தி துறை, மால்கள்… கோவையில் குவியுது முதலீடு!