சென்னை: இலவச மடிக்கணினி வழங்குவதாக சமூக வலைதளங்களில் பரவக்கூடிய தவறான தகவல்களை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு விவரம்: ”ஏஐசிடிஇ சார்பில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படுவதாக சமூக வலைதளங்களில் போலியான தகவல்கள் பரவி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் எதையும் தொடங்கவில்லை என்பதை தெளிவுப்படுத்துகிறோம்.
எனவே, இதை நம்பி மாணவர்கள், பெற்றோர்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் விவரங்களையோ அல்லது கட்டணங்களையோ அளிக்க வேண்டாம். ஏஐசிடிஇ வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டு வருகிறது. மேலும், ஏஐசிடிஇ தொடர்பான தகவல்களை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் (www.aicte-india.org) இருந்து பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.