காபூல்: ஆப்கனிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் பல்வேறு சட்ட நடவடிக்கைகளால் 300-க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள ஐ.நா உதவிக்குழு தெரிவித்துள்ளது.
ஆப்கனிஸ்தானில் கடந்த 2021-ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், 3 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆட்சி செய்து வருகின்றனர். தலிபான்களின் ஆட்சியில் பத்திரிகையாளர்களின் நிலை தொடர்பாக அந்நாட்டில் உள்ள ஐ.நா உதவிக் குழு (UNAMA) மற்றும் மனித உரிமைகள் அலுவலகம் ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த ஆவணத்தில், 2021ல் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர்கள் உரிமை மீறல்களுக்கு உள்ளாகி உள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு எதிரான டஜன் கணக்கான சித்ரவதை மற்றும் தன்னிச்சையான கைது வழக்குகள் இதனை வெளிப்படுத்துகின்றன.
ஆப்கானிஸ்தானின் ஊடகத் துறை மூன்று ஆண்டுகால தலிபான் அரசாங்கத்தின் கீழ் அதிர்ச்சி தரும் வகையில் சுருங்கியுள்ளது. பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள், தணிக்கை மற்றும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நிறைந்த சூழலில் செயல்படுகின்றன. ஆகஸ்ட் 2021-ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கடந்த செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 336 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதில் 256 பேர் தன்னிச்சையான கைது மற்றும் தடுப்புக் காவல் நடவடிக்கைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
130 பத்திரிகையாளர்கள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். 75 பேர் அச்சுறுத்தல்களையும், மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணம் தொடர்பாக பேசிய ஐ.நா. உதவிக் குழு தலைவர் ரோஸா ஒட்டுன்பேயேவா, “பத்திரிகையாளர்கள் எதை செய்தியாக்கலாம், எதை செய்தி ஆக்கக் கூடாது என்பதில் தெளிவான விதிமுறை இல்லாததால், அவர்கள் மிரட்டல் மற்றும் தன்னிச்சையான தடுப்புக் காவலுக்கு உள்ளாகின்றனர்” என குறிப்பிட்டார்.
இந்த ஆவணம் குறித்து பதிலளித்த தலிபான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், “தேசிய நலன் மற்றும் இஸ்லாமிய விழுமியங்களைக் கருத்தில் கொண்டு ஆப்கான் ஊடகங்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். தலிபான் அரசாங்கத்தின் ஊடக நடத்தை விதிகளை ஊடகவியலாளர்கள் மீண்டும் மீண்டும் மீறினால், அவர்கள் தடுத்து வைக்கப்படுவார்கள். இருப்பினும் யாரும் நீண்ட காலம் காவலில் வைக்கப்படவில்லை என்று கூறினார்.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன் அந்நாட்டில் 1,700 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 8,400 பத்திரிகையாளர்கள் இருந்தனர். ஆனால், தற்போது 560 பெண்கள் உட்பட 5,100 பேர் மட்டுமே பத்திரிகைத் தொழிலில் உள்ளனர். “பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகப் பணியாளர்கள் மதிக்கப்படுவதையும் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று ஐ.நா மனித உரிமைகள் தலைவர் வோல்கர் டர்க் கூறியுள்ளார். பத்திரிகை சுதந்திரத்தில் 180 நாடுகளின் தரவரிசையில் 2021 ஆம் ஆண்டு 122வது இடத்திலிருந்த ஆப்கனிஸ்தான் தற்போது 178-வது இடத்துக்கு சரிந்துள்ளது.