அடிலெய்ட் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது. பெர்த் டெஸ்ட் மகா உதையை அடுத்து ஆஸ்திரேலியாவின் அடுத்த சிறந்த வீரர் எங்கிருந்து வரப்போகிறார் என்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன, குறிப்பாக மார்னஸ் லபுஷேனின் ஃபார்ம் அந்த அணிக்கு கவலையளித்தாலும் அவருக்குப் பதிலாக வேறு சிறந்த வீரர்கள் அங்கு உள்நாட்டுக் கிரிக்கெட்டில் இல்லை என்பதும் சிக்கலே.
இந்நிலையில், அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கு அணியில் மாற்றம் செய்யப்போவதில்லை என்று கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளமையும் விசித்திரமாகியுள்ளது. மார்னஸ் லபுஷேனிடம் இன்னமும் திறமை பாக்கியிருக்கிறது, அவர் அதை மீட்டெடுப்பார் என்று பயிற்சியாளர் மெக்டொனால்டும், கேப்டன் கம்மின்ஸும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
லபுஷேன் தேவை என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் கருதுகிறது. கடந்த 8 இன்னிங்ஸ்களில் லபுஷேன் ஒற்றை இலக்க ஸ்கோர்களைக் கடக்கவில்லை என்பதுதான் ஆஸ்திரேலியர்களுக்கு வேதனையான விஷயம்.
இந்நிலையில், லபுஷேன் குறித்து ஆஸ்திரேலிய பயிற்சியாளர் மெக்டொனால்டு கூறும்போது, “அவர் சிறப்பாக ஆடியதைப் பார்த்திருக்கிறோம், அப்படி அவர் ஆடும்போது இருக்கும் தீவிரத்தன்மையைப் பார்த்திருக்கிறோம்.
ஒரு வீரரின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் பற்றித்தான் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிலையில் அவர் இருக்கும் போது வெளியிலிருந்து விமர்சனங்கள் வரவே செய்யும். ஆனால், உள்ளுக்குள் அவர் மீண்டு வருவார், சிறப்பாகவே உள்ளார், எங்களுக்குத் தேவையுள்ள வீரர் அவர்தான். அடிலெய்ட் டெஸ்ட்டில் அதே அணிதான்.
அவர் இந்தச் சரிவிலிருந்து மீள இந்திய வேகப் பந்துவீச்சாளர்களை ஆக்ரோஷமாக ஆட அவரை ஊக்குவித்து வருகிறோம். மனநிலை முக்கிய காரணம், ஆட்ட உத்தியும் இத்தகைய மனநிலைக்கு ஒரு காரணம். அவர் நிச்சயம் ரன் குவிக்கும் பாதைக்குத் திரும்புவார் என்று நம்புகிறோம்.
பும்ராவை எதிர்கொள்ள தனியே உத்திகளை விவாதித்து வருகிறோம். பந்தை ரிலீஸ் செய்யும் விதம், அதன் கோணம், ஸ்விங், லைன் ஆகியவற்றையும் ஆய்வு செய்து வருகிறோம். இதையெல்லாம் செய்யலாம். ஆனால், பும்ராவை அப்படியே அச்சுரு செய்வது கடினம். பும்ராவுக்கு எதிராக ரன்களை எப்படி எடுக்க வேண்டும் என்பது பற்றியதே எங்கள் விவாதம்” என்று மெக்டொனால்டு கூறினார் .