ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்றது. 10 ஐபிஎல் அணிகளும் ஏலத்தில் தாங்கள் வாங்க விரும்பிய வீரர்களை வாங்கியுள்ளன. இதில் 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் கோப்பை வென்ற அனுபவம் உள்ள கேப்டன் டேவிட் வார்னரை எந்தவொரு அணியும் ஏலத்தில் வாங்கவில்லை. இப்படியாக, இந்த ஏலத்தின் சர்ப்ரைஸ்கள் சிலவற்றை பார்ப்போம்.
வைபவ் சூர்யவன்ஷி: 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு ஏலம் எடுத்தது. பிஹாரை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான சூர்யவன்ஷி சமீபத்தில் சென்னையில் இளம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 62 பந்துகளில் 104 ரன்கள் விளாசியிருந்தார். அவரை ஏலத்தில் வாங்க டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் முயன்றன. இறுதியில் ராஜஸ்தான் அதில் வென்றது. அந்த அணியின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெங்கடேஷ் ஐயர்: இந்த முறை ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் ரிஷப் பந்த் (ரூ.27 கோடி), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26.75 கோடி) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளவர் வெங்கடேஷ் ஐயர். இவர் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றதில் அவரது பங்கு முக்கியமானது. இருப்பினும் அவரை அந்த அணி தக்க வைக்கவில்லை.
ஏலத்தில் பங்கேற்ற ஆல் ரவுண்டரான அவரை வாங்க ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ரூ.23.75 கோடிக்கு அவரை கொல்கத்தா அணி வாங்கியது. வரும் சீசனில் மீண்டும் கொல்கத்தாவுக்காக அவர் அசத்த உள்ளார்.
அல்லா கசன்ஃபர்: ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த 18 வயது சுழற்பந்து வீச்சாளர் அல்லா கசன்ஃபரை ரூ.4.8 கோடிக்கு வாங்கியுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. அவரை கொல்கத்தா அணியும் வாங்க முன்வந்தது. இருப்பினும் ஏலத்தில் விட்டுக் கொடுக்காத மும்பை அணி அவரை வாங்கியது. அண்மையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தனது அபார திறனை அல்லா கசன்ஃபர் வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரது வரவு மும்பை அணியின் சுழற்பந்து வீச்சுக்கு வலு சேர்த்துள்ளது.
நுவான் துஷாரா: இலங்கையை சேர்ந்த வலது கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாராவை ஏலத்தில் ரூ.1.60 கோடிக்கு வாங்கியுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. இந்த முறை நட்சத்திர வீரர்கள் என்ற பார்வை இல்லாமல் திறன் படைத்த வீரர்களை ஆர்சிபி ஏலத்தில் வாங்கியுள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் துஷாராவை வாங்கியது அந்த அணிக்கு உதவும் என்றே தெரிகிறது. அவரது ஸ்லோ டெலிவரி மற்றும் யார்க்கர் ஆர்சிபி-க்கு பந்து வீச்சில் பெரிதும் உதவும். புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள் ஆகியோர் வேகப் பந்துவீச்சில் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
அன்ஷுல் காம்போஜ்: 23 வயதான அன்ஷுல் காம்போஜை ஏலத்தில் ரூ.3.40 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பவுலிங் ஆல் ரவுண்டரான அவர், கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். அவரது அடிப்படை விலை ரூ.30 லட்சம். இருப்பினும் அதை காட்டிலும் சுமார் 10 மடங்கு கூடுதலாக சென்னை அணி அவரை வாங்கியுள்ளது. டெல்லி, மும்பை உள்ளிட்ட அணிகளும் ஏலத்தில் அவரை வாங்க போட்டி போட்டன.
ஆண்ட்ரே சித்தார்த்: உள்ளூர் கிரிக்கெட்டில் தமிழக அணிக்காக விளையாடி வரும் 18 வயது வீரர் ஆண்ட்ரே சித்தார்த். வலது கை பேட்ஸ்மேனான இவர் மிடில் ஆர்டரில் விளையாடக் கூடியவர். கூச் பெஹார் டிராபி, புச்சி பாபு தொடர், ரஞ்சி டிராபி உள்ளூர் கிரிக்கெட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் அழுத்தம் மிகுந்த தருணங்களை கையாண்டுள்ளார். இதை கருத்தில் கொண்டு சென்னை அணி அவரை அடிப்படை விலையான ரூ.30 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.
தீபக் சாஹர்: கடந்த 2018 சீசன் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக தீபக் சாஹர் செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்பு ராஜஸ்தான் மற்றும் புனே அணியில் விளையாடி உள்ளார். இந்த நிலையில், ஏலத்தில் பங்கேற்ற அவரை வாங்க மும்பை, சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் ஆர்வம் காட்டின. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் சென்னை அணியில் இருந்து மற்றொரு அணியான மும்பைக்கு அவர் இப்போது மாறியுள்ளார். போல்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர் என மும்பை அணியின் வேகப் பந்துவீச்சு கூட்டணி அபாரம் என அந்த அணியின் ரசிகர்கள் இப்போதே சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
போனியாகாத வார்னர்: கிரிக்கெட் உலகின் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக அறியப்படுபவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவர் 2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது உலக நாடுகளில் நடைபெறும் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த சூழலில் தான் மெகா ஏலத்தில் பங்கேற்ற அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை. ஐபிஎல் கோப்பை வென்ற 8 கேப்டன்களில் வார்னர் ஒருவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்துல் தாக்குர், மயங்க் அகர்வால், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரையும் எந்த அணியும் வாங்கவில்லை.