மதுரை: “தமிழக முதல்வரின் அறிவுரைபடி, துணைவேந்தர் நியமனம் குறித்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர்களுக்கு 2024-25-ம் ஆண்டுக்கான இணையவழி பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டது. கலை அறிவியல் கல்லூரிகளில் இருந்து 377 விண்ணப்பங்களும், தொழில் நுட்ப கல்லூரிகள் மூலம் 344 மனுக்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான மாறுதல் ஆன்லைன் கலந்தாய்வு மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் இன்று (நவ.26) நடந்தது.
தமிழக உயர் கல்வி அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் நடந்த கலந்தாய்வில் கலை அறிவியல், கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 29 உதவி, இணை பேராசிரியர்களுக்கும், அரசு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 5 பேராசிரியர்கள், இணை, உதவி பேராசிரியர்களுக்கும், அரசு பல்வகை தொழில் நுட்ப கல்லூரிகளில் இருந்து 15 இணை, உதவி பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கும் விருப்ப மாறுதல் ஆணையை அமைச்சர் நேரில் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி கூடுதல் தலைமை செயலாளர் கோபால், தொழில்நுட்ப கல்வி ஆணையர் ஆப்ரகாம், கல்லூரிக்கல்வி ஆணையர் சுந்தரவல்லி, மீனாட்சி கல்லூரி முதல்வர் சூ.வானதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் இருந்து போதை ஒழிப்பு பேரணியை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார். முன்னதாக மாணவியர்களின் போதை ஒழிப்பு சைகை விழிப்புணர்வு நாடகத்தை பார்த்து, மாணவிகளை அவர் பாராட்டினார்.
தமிழக முழுவதிலும் இது போன்ற சைகை முறையிலான விழிப்புணர்வு நாடகத்தை கொண்டு செல்ல வேண்டும் இதனை வீடியோவாக பதிவுசெய்து இணையதளத்தில் பதிவிடுங்கள் என கல்லூரி முதல்வர் சூ. வானதியிடம் அமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து கல்லூரியில் அமைக்கப்பட்ட உதவி மையத்தையும் பார்வையிட்டு பாராட்டினார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அமைச்சர் கோவி.செழியன் கூறியது: “தமிழக அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் பொதுகலந்தாய்வு ஆசிரியர்கள் கோரிக்கை ஏற்று, முறைகேடு இன்றி வெளிப்படைத்தன்மையுடன் நடந்தது. தமிழகளவில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளிலிருந்து 198 பேருக்கும், தொழில்நுட்ப கல்லூரிகளில் இருந்து 93 பேருக்கும் பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணைவேந்தர் நியமனத்தை பொருத்தமட்டிலும் எந்த அளவுக்கு ஆளுநரால் இடர்பாடு உள்ளது என்பது உங்களுக்கும் தெரியும். துணைவேந்தர் நியமனத்தில் ஒரு சுமுகமான முடிவு எடுத்து ,மாநில உரிமை, ஆசிரியர்கள் , மாணவர்கள் , பல்கலைக்கழக நலன், பாதுகாப்பு கருதி முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதன்படி, விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். காமராஜர் பல்கலை நிதி நெருக்கடிக்கும் தீர்வு காணப்படம்,” என்று அவர் கூறினார்.
கவுரவ விரிவுரையாளர்கள் அமைச்சரிடம் கோரிக்கை: இக்கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர் கல்வி அமைச்சரிடம், மீனாட்சி கல்லூரியில் பணிபுரியும் 50-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை வைத்தனர். இக்கல்லூரியில் 15 முதல் 20 ஆண்டு வரை பணிபுரிகிறோம். தகுதி இருந்தும் பணி நிரந்தரம் ஆக முடியவில்லை. எங்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என, வலியுறுத்தினர். குடும்ப சூழல் கருதி தேனி மாவட்ட பெண் விரிவுரையாளர் ஒருவர், தேனி பகுதியிலுள்ள அரசு கல்லூரிக்கு பணிமாறுதல் செய்ய அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.