திருப்பூர்: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நசுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுவதாக திருப்பூர் தொழில் துறையினர் குற்றம்சாட்டுகின்றனர்.
தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் டீமா சங்க அலுவலகத்தில் தலைவர் எம்.பி.முத்துரத்தினம், பொது செயலாளர் எம். ஜெயபால், பொருளாளர் எஸ்.கோவிந்தராஜ், துணைத் தலைவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கூட்டாக திருப்பூரில் இன்று (நவ. 26) செய்தியாளர்களிடம் பேசியது: ”தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் செய்வோர் 90 சதவீதம் இருக்கிறோம். குறிப்பாக திருப்பூரில் சிறிய நிறுவனங்கள் இயங்க முடியாத சூழல் இன்றைக்கு உருவாகிவிட்டது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மின் கட்டண உயர்வு, மூலப்பொருள் விலையேற்றம், ஜிஎஸ்டி, பணம் மதிப்பு நீக்கம், கரோனா தொற்று, நூல் விலை என பல்வேறு காரணங்களால் தொழிலை தொடர்ந்து செய்ய முடியாமல், 50 சதவீதம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பலர் இந்த தொழிலை விட்டு வெளியேறும் நெருக்கடியில் தான் உள்ளனர்.
மின் கட்டண உயர்வில் இருந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் மீள முடியாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அனைத்து வரியும் உயர்த்துவதன் மூலம் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அரசு தொழிலை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, தொழில் துறையினர் மீது சுமை மேல் சுமை ஏற்றக்கூடாது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, மின் கட்டணம், வரி உயர்வு மிக அதிகளவில் உள்ளது.
பெரிய நிறுவனங்களுக்கு அரசே சலுகை காட்டுகிறது. ஆனால் சிறு, குறு மற்றும் நடுத்த நிறுவனங்கள் அரசிடம் கோரிக்கை வைக்க முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு வாடகை கட்டிடத்துக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. உலக அளவிலான போர் உள்ளிட்ட காரணங்களால் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் உள்நாட்டு வர்த்தகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிப்பது நியாயமற்ற செயல். மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கும் இலவச திட்டங்களுக்கான நிதிக்காக சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை நசுக்குகின்றனர்.
இன்றைக்கு எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு சொத்து வரி உயர்வையும், மத்திய அரசு கட்டிடத்துக்கு விதித்துள்ள ஜிஎஸ்டி வரியையும் திரும்பப் பெற வேண்டும். கட்டிடவரி, காலி இடத்துக்கு வரி, குப்பை வரி மாநில அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. வாக்குக்காக அரசியல் கட்சிகள் சலுகை வழங்குகிறார்கள். அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை கவனம் செலுத்தாமல் இருப்பதால், இன்றைக்கு படுமோசமாக சென்று கொண்டிருக்கிறது. கட்சி நிதியில் இலவசங்கள் வழங்கட்டும். இலவசம் வழங்கி, மக்களிடம் வரியை அதிகமாக வாங்குகிறார்கள். இலவசம் வந்தபிறகே தமிழ்நாடு கடனில் தத்தளிக்க துவங்கி உள்ளது.
வணிக பயன்பாட்டுக்கு உள்ள கட்டிடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் வரும் 29-ம் தேதி நடைபெறும் வணிகர் சங்கங்களின் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு முழு ஆதரவு அளிக்கிறது. இதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், அடுத்தகட்ட போராட்டம் துவங்கப்படும். ரூ. 1.5 கோடிக்கு கீழ் ஆண்டு வர்த்தகம் செய்பவர்களால், வாடகைக்கு செலுத்தும் 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியை உள்ளீட்டு வரியாக, திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்பது சிறு தொழில் முனைவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
20 ஆயிரம் சதுரஅடி கொண்ட கட்டிடத்துக்கு ரூ. 1 லட்சம் வாடகை என்றால், ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் கிடைக்கும். ஆனால் இதில் ரூ. 9 லட்சம் வரியாக செலுத்த வேண்டி உள்ளது. தமிழ்நாடு அரசு மின் கட்டணம், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்துள்ள சூழ்நிலையில் தற்போது உள்ளாட்சி நிர்வாகத்தால் உயர்த்தப்பட்டுள்ள தொழில், சொத்து மற்றும் குப்பை வரிகளை செலுத்த முடியாமல் இருப்பதால், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதனை திரும்ப பெற வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.