திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் கார்த்திகை பிரம்மோற்சவம் நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. டிசம்பர் 6-ம் தேதி பஞ்சமி தீர்த்த நிகழ்வுடன் இவ்விழா நிறைவடைய உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று பத்மாவதி தாயார் கோயிலில் வாசனை திரவியங்களால் கோயிலை சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சன சேவை ஆகம விதிகளின்படி காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்றது. சுப்ரபாதம், சகஸ்ர நாம அர்ச்சனை முடிந்த பிறகு கோயில் கருவறை முதற்கொண்டு, கொடிக்கம்பம், பலிபீடம், விமான கோபுரம், முகப்பு கோபுர வாசல், உப சன்னதிகள் என அனைத்து இடங்களும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட்டது. இதனால் நேற்று காலை நடைபெற இருந்த திருக்கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் பத்மாவதி தாயார் கோயிலுக்கு ஹைதராபாத்தை சேர்ந்த சுவர்ண குமார் 6 சன்னதி திரைகளையும், திருப்பதியை சேர்ந்த சுதாகர், ஜெயசந்திரா ரெட்டி, அருண்குமார் ஆகிய பக்தர்கள் 2 சன்னதி திரைகள் மற்றும் உண்டியல்களுக்கான 25 வெள்ளை திரைகளையும் நேற்று காணிக்கையாக வழங்கினர்.