புதுடெல்லி: மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அப்போது”தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எந்த புகாரும் கூறுவது கிடையாது. அதேநேரம் தேர்தலில் தோல்வியை தழுவும் கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்களை கூறுகின்றன” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பால். கடந்த 2008-ம் ஆண்டில் இவர் பிரஜா சாந்தி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த கட்சிக்கான அங்கீகாரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்தச் சூழலில் கே.ஏ. பால் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு மூலம் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் வேட்பாளர்கள் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும். அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் வன்முறைகளை தடுக்க வேண்டும். கட்சிகள் நன்கொடை பெறும் நடைமுறைகளை ஒழுங்குபடுத்த வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வரலே அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கே.ஏ.பால் நேரில் ஆஜராகி வாதிட்டபோது, “உலக அமைதி அமைப்பின் தலைவராக நான் பதவி வகிக்கிறேன். எங்கள் அமைப்பு சார்பில் இதுவரை 3.1 லட்சம் ஆதரவற்றோர், கணவரை இழந்த 40 லட்சம் பெண்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம். வாக்குச்சீட்டு நடைமுறை கோரிக்கைக்கு ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் சுமார் 180 பேர் ஆதரவு அளிக்கின்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று அமெரிக்க தொழிலதிபரும் தொழில்நுட்ப நிபுணருமான எலன் மஸ்க் கூறியிருக்கிறார். இதை கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு தொழிலதிபர், காங்கிரஸ், பாஜக உட்பட 6 பெரிய கட்சிகளுக்கு 12,000 கோடியை வழங்கி உள்ளார். கட்சிகள் நன்கொடை பெறுவதை ஒழுங்குபடுத்த வேண்டும்” என்று கே.ஏ.பால் தெரிவித்தார்.
அவரது வாதத்தை தொடர்ந்து நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வரலே கூறும்போது, “தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து எந்த புகாரும் கூறுவது கிடையாது. அதேநேரம் தேர்தலில் தோல்வியை தழுவும் கட்சிகள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்யப்பட்டிருப்பதாக பல்வேறு புகார்களை கூறுகின்றன.
ஆந்திராவை பொறுத்தவரை சந்திரபாபு நாயுடு தேர்தலில் தோல்வி அடைந்தபோது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது புகார் கூறினார். அண்மையில் நடந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்திருக்கிறார். தற்போது அவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து புகார் கூறுகிறார். நீங்கள் (கே.ஏ.பால்) சமூக சேவையில் ஈடுபட்டிருப்பதாக கூறுகிறீர்கள். நீங்கள் ஏன் அரசியல் களத்துக்குள் நுழைய வேண்டும். உங்களது மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே டெல்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசியலமைப்பு தின விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றார். அவர் கூறும்போது, “நாங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை விரும்பவில்லை. வாக்குச்சீட்டு நடைமுறையில் தேர்தலை நடத்த வேண்டும்” என்று தெரிவித்தார். விழாவில் பங்கேற்ற மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல், காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா உள்ளிட்டோரும் இதை கருத்தை முன்வைத்தனர்.