புதுடெல்லி/ சென்னை: சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் நோக்கில் கூடுகள் தயாரித்து, மக்களுக்கு வழங்கி வரும் சென்னையை சேர்ந்த ‘கூடுகள்’ அறக்கட்டளைக்கு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 116-வது ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது. இதில், சிட்டுக்குருவி குறித்து அவர் பேசியதாவது: அனைத்து மொழிகள், கலாச்சாரத்திலும் சிட்டுக்குருவி பற்றிய சம்பவங்கள், கதைகள் உள்ளன. நகரங்களில் தற்போது மிக அரிதாகவே சிட்டுக்குருவிகாணப்படுகிறது. இந்த பறவையை மீண்டும் மீட்டெடுக்க சில வித்தியாசமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
குறிப்பாக, சென்னையை சேர்ந்த ‘கூடுகள் ’அறக்கட்டளை, சிட்டுக்குருவியின் எண்ணிக்கையை பெருக்க, பள்ளி குழந்தைகளை தங்கள் இயக்கத்தில் சேர்த்துள்ளது. சிட்டுக்குருவியின்கூட்டை எவ்வாறு கட்டுவது என்பது குறித்து குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் சிட்டுக்குருவிகளுக்காக 10 ஆயிரம் கூடுகளை இந்த அமைப்பு உருவாக்கியுள்ளது. இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டால், சிட்டுக்குருவி கட்டாயம் மீண்டும் நமது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிடும். இவ்வாறு பிரதமர் பேசினார்.
10 ஆயிரம் கூடுகள் தயாரிப்பு: சென்னை போன்ற நகரப் பகுதிகளில் சிட்டுக்குருவிகளை மீண்டும் கொண்டு வந்து, அவற்றின் பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் வடசென்னையை சேர்ந்த கணேசன் – சாந்தினி தம்பதியர் 2014-ம் ஆண்டு ‘கூடுகள்’ என்ற அறக்கட்டளையை தொடங்கி நடத்தி வருகின்றனர். பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், தங்களது பணி குறித்து, அறக்கட்டளையின் இணை நிறுவனர் சாந்தினி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: சிட்டுக்குருவி இனத்தை பெருக்க வேண்டும் என்ற நோக்கில் ‘கூடுகள்’ அறக்கட்டளையை தொடங்கினோம். இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக, பள்ளி குழந்தைகளை ஈடுபடுத்தி உள்ளோம். அந்த வகையில், பள்ளி குழந்தைகளுக்கு கூடு செய்ய கற்றுக்கொடுத்து, அவர்கள் மூலமாக, இதுவரை 10 ஆயிரம் சிட்டுக்குருவி கூடுகள் தயாரித்துள்ளோம். இதை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம்.
சிட்டுக்குருவிகள் அதிகரிப்பு: வடசென்னையில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நாங்களே இவற்றை பொருத்தி, சிட்டுக்குருவியின் செயல்பாடுகளை கண் காணித்து வருகிறோம். இதனால், வடசென்னை பகுதியில் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் பல்வேறு பள்ளிகளும் இதில் ஆர்வம் காட்டுகின்றன. தங்களது மாணவர்களுக்கும் சிட்டுக்குருவி கூடு கற்றுத்தருமாறு எங்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்த கூடுகளை வழங்கி வருகிறோம்.
1 லட்சம் கூடு தயாரிக்க இலக்கு: ஒரு லட்சம் கூடுகளை தயாரித்து, சிட்டுக்குருவி இனத்தை மேலும் பெருக்குவதுதான் எங்கள் அடுத்த இலக்கு. அதற்கேற்ப, பள்ளி மாணவர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம். இந்த சூழலில், மனதின்குரல் நிகழ்ச்சியில் பிரதமர் எங்களை குறிப்பிட்டு பாராட்டியிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்களது பணிக்கு அங்கீகாரம் தருவதாகவும் அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இயங்கும் குழந்தைகள் நூலகத்துக்கும் பாராட்டு: சென்னை ஆலப்பாக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது ‘பிரக்ருத் அறிவகம்’ என்ற நூலகம். பொறியாளரான ஸ்ரீராம் (42) இதை நடத்தி வருகிறார். இவர், சன் மைக்ரோசிஸ்டம்ஸ், ஆரக்கிள் போன்ற முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். சிறு வயதிலேயே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக, குழந்தைகளுக்கான நூலகமாக இதை தொடங்கினார். பின்னர், ரோபோட்டிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் வகுப்புகள் என கற்றல் மையமாக மாறி, குழந்தைகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்றைய ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் இதையும் குறிப்பிட்டு பிரதமர் மோடி பாராட்டினார்.
பிரதமர் கூறும்போது, “சென்னையில் உள்ள ‘பிரக்ருத் அறிவகம்’ எனும் சிறார் நூலகம், குழந்தைகளுக்கான படைப்பாற்றல் மற்றும் கற்றலின் மைய களமாக உள்ளது. இந்த நூலகத்தை ஸ்ரீராம் கோபாலன் என்பவர் நடத்தி வருகிறார். இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. அத்துடன், இந்த நூலகத்தில் நடத்தப்படும் கதை சொல்லும் அமர்வு, கலை பட்டறை, நினைவாற்றல் பயிற்சி வகுப்பு, ரோபோட்டிக்ஸ் போன்ற பலவிதமான செயல்பாடுகளும் குழந்தைகளை ஈர்க்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் பிடித்தமான ஏதோ ஒன்று இங்கு இருப்பது இதன் சிறப்பு ஆகும்” என்று கூறி பாராட்டினார்.