சென்னை: ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவுவது உள்ளிட்டவை இந்த மையத்தின் செயல்பாடுகளில் அடங்கும்.
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் முக்கிய கவலையாகும். கட்டுப்பாடுகளுக்கும் புதுமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.
இம்மையத்தின் தாய் அமைப்பான சென்னை ஐஐடி பிரவர்த்தக், உச்ச நீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம், இந்திய ராணுவம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டப் பணிகளில் பணியாற்றி வருகிறது.
தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் AVSM, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம்.ஜே.சங்கர் ராமன், CHAI தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கவுரவ் ரெய்னா மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இதர தொடர்புடையோர் முன்னிலையில் இந்த மையம் நவம்பர் 14, 2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த புதிய மையம் மத்திய-மாநில அரசு நிறுவனங்கள், தொழில்துறை, ஸ்டார்ட்அப்கள், கல்வி ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, இந்தியாவில் மனித ஆற்றலை மேம்படுத்தவும், பெருக்கவும் தீர்வுகளை வழங்கும். இப்படி உருவாக்கப்பட்ட தீர்வுகள், கற்றுக் கொண்ட பாடங்களை பிற நாடுகளிலும் பயன்படுத்தலாம்.
இம்மையத்தின் நோக்கம் மூன்று பரிமாணங்களை மையமாகக் கொண்டிருக்கும். மனித ஆற்றலை மேம்படுத்துதல், மக்களைப் பாதுகாத்தல், கலாச்சாரம்- பாரம்பரியத்தின் மூலம் பொதிந்துள்ள சமூக மதிப்பைப் பெருக்குதல்
ஐஐடி-எம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் என்பது சென்சார்கள், நெட்வொர்க்கிங், ஆக்சுவேட்டர்ஸ் அண்ட் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் போன்றவைகளில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தை உள்ளடக்கிய செக்சன்-8 நிறுவனமாகும். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் சைபர்-ஃபிசிக்கல் சிஸ்டம்ஸ் தொடர்பான பல்துறை தேசிய இயக்கத்தின் கீழ் இதற்கு நிதியுதவி வழங்கப்பட்டு, சென்னை ஐஐடி மூலம் நடத்தப்பட்டு வருகிறது.