புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் முழுவதும் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள முதன்மை குழு அறையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, சிவசேனா உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பட்டியலில் பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்த) மசோதாவும் இடம்பெற்றுள்ளது. டெல்லி மாவட்ட நீதிமன்றங்களின் மேல்முறையீட்டு அதிகார வரம்பை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.
மசோதாக்கள் விவரம்: இதுதவிர, வணிக கப்பல், கடலோர கப்பல் போக்குவரத்து, துறைமுகம் குறித்த மசோதாக்களும் மக்களவையில் அறிமுகம் செய்து, விவாதத்துக்கு பிறகு நிறைவேற்றப்பட உள்ளன. மணிப்பூர் வன்முறை, லஞ்ச வழக்கில் கவுதம் அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்திருப்பது உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே தெரிவித்துள்ளார். பரபரப்பான சூழலில் இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த கோரிக்கையை தீவிரமாக வலியுறுத்துவார்கள் என்று தெரிகிறது.