வங்கி ஊழியரான சூர்யா (சத்யதேவ்), தன்னுடன் பணியாற்றும் சுவாதியை (பிரியா பவானி சங்கர்) காதலிக்கிறார். சுவாதி, தனது ‘டைப்பிங்’ தவறால் பணச்சிக்கலில் மாட்டிக்கொள்ள, வேறொரு கணக்கிலிருந்து பணத்தை மாற்றி அவர் தப்பிக்க உதவுகிறார் சூர்யா. இந்த உதவி, அவரை வேறொரு பிரச்சினையில் இழுத்துவிடுகிறது. பிரபல தொழிலதிபரான ஆதிக்கு (டாலி தனஞ்செயா), நான்கு நாட்களுக்குள் ரூ.5 கோடி கொடுக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகிறது சூர்யாவுக்கு. அது என்ன விவகாரம், அவரால் அதைக் கொடுக்க முடிந்ததா, அதற்காக என்ன ரிஸ்க் எடுக்கிறார்’ என்பது மீதி கதை.
சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ படத்தைப் போலவே பொருளாதார குற்றப் பின்னணியில் சுவாரஸ்யமான த்ரில்லரைத் தந்திருக்கிறார், இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். வங்கித்துறையில் நடக்கும் பணப்பரிவர்த்தனையின் பின்னணியில் எப்படியெல்லாம் அதைக் கையாளலாம் என்கிற மோசடி வித்தைகளை ட்விஸ்ட்களுடனும் படபடப்புடனும் சொல்கிறது, படம். உதவுவதற்காக ஒரு சிக்கல், அதைத் தொடரும் மெகா சிக்கல், அதன் பின்னணியில் தொழிலதிபர்களின் மோதல், பங்கு மார்க்கெட் மோசடி என கொஞ்சம் சீரியஸான கதைதான் என்றாலும் அதை ரசனையாகச் சொன்ன விதத்தில் கவர்கிறார் இயக்குநர்.
வங்கியில் காசோலை பயன்பாட்டின் சிக்கல்கள், கோரப்படாத பணம், நாமினி இல்லாத வங்கிக் கணக்குகள் ஆகியவற்றை நாயகன் தனக்குச் சாதகமாக எப்படி மாற்றிக்கொள்கிறார் என்கிற ‘ஒயிட் காலர்’ மோசடியை விளக்கிச் செல்லும் திரைக்கதை, சிறப்பு.
ஹீரோ சத்யதேவ் என்றாலும் தொழிலதிபர் டாலி தனஞ்செயா கேரக்டரையும் இன்னொரு நாயகன் போலவே உருவாக்கி இருப்பதும் இருவருக்குமான கதாபாத்திர வடிவமைப்பும் ரசிக்க வைக்கின்றன. சும்மா வந்துபோவது போல இல்லாமல், நாயகி பிரியா பவானி கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பது அழகு. அதை அவர் சரியாகவே பயன்படுத்தி இருக்கிறார்.
இளம் வங்கி அதிகாரி கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் சத்யதேவ். சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து வெளியேறத்தவிக்கும்போதும், குற்றத்துக்குள் இறங்கிய பின் வரும் அசட்டுத் துணிச்சல் எனவும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். நாயகனுக்கு உதவும் பாபா என்ற கேரக்டரில் சத்யராஜ் தனித்துத் தெரிகிறார். நாயகனின் நண்பனாக வந்து காமெடி ஏரியாவை பார்த்துக்கொள்கிறார், சத்யா. சுரேஷ் மேனன், சுனில், ராமச்சந்திர ராஜு, ராமராஜு உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களும் சிறந்த நடிப்பை வழங்கி இருக்கின்றன.
முதல் பாதியின் பறக்கும் வேகத்துக்கு கச்சிதமான ‘கட்’களை கொடுத்த படத் தொகுப்பாளர் அனில் கிரிஷ், பின்பாதியில் கவனம் செலுத்த தவறிவிட்டார். இரண்டாம் பாதியின் நீளமும் சில லாஜிக் பிழைகளும் படத்தின் பெருங்குறை. கதைக்குள் நிகழும் கிளைக் கதைகள் தேவையற்றதாக இருக்கின்றன. இருந்தாலும் ரவி பஸ்ரூரின் இனிமையானப் பின்னணி இசையும் சத்யா பொன்மாரின் அழகான ஒளிப்பதிவும் அந்தக் குறையை போக்குவதால், ஜீப்ரா புதிய அனுபவத்தைத் தருகிறது.