சமூக வலைதளங்களில் ‘தலயா… தளபதியா..?’ என ரசிகர்கள் சண்டை செய்த காலமெல்லாம் மலையேறிவிட்டது. ‘இன்ஃப்ளூயன்சர்’களுக்காகச் சண்டை செய்வதுதான் தற்போதைய ட்ரெண்ட். ‘ஸ்குவாட்’, ‘சோல்ஜர்ஸ்’, ‘கேங்’ எனும் பெயரில் இன்ஸ்டாகிராம், யூடியூப் இன்ஃப்ளூயன்சர்களுக்காகப் படைகள் அமைத்து நேரத்தைப் போக்கி வருகிறார்கள் இணையவாசிகள்.
களத்தில் போர் என முழங்கியவுடன் சிப்பாய்கள் கத்தி எடுத்துகொண்டு எதிரி நாட்டு படைகளை தாக்குவார்களே, அதே போன்றதொரு காட்சிகள்தான் தற்போது இன்ஃப்ளூயன்சர் உலகில் ஓடிக் கொண்டிருக்கிறது. கருத்து மோதல் ஏற்படும்போதோ, போலி விளம்பரம் செய்து மாட்டிக்கொண்டாலோ இன்ஃப்ளூயன்சரின் தவறுகளை சற்றும் பொருட்படுத்தாமல், ‘நாங்க உங்களுக்காக இருக்கோம், ப்ரோ.
நீங்க தைரியமா வீடியோ பண்ணுங்க’ என்று பின்னூட்டங்களில் பதிவு செய்து ‘படை பலத்தை(?)’ காட்டி வருகிறார்கள் பின் தொடர்பவர்கள். இன்ஃப்ளூயன்சர்களில் சிலரும் ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்’ என்பதற்கேற்ப ரசிகர்களை அரண்களாகப் பயன்படுத்தி புகழைத் தேடிக் கொள்கிறார்கள். என்னத்த சொல்ல!